×

டிராவல்ஸ் அதிபர் கொலையில் முக்கிய குற்றவாளி உள்பட 5 பேர் கைது

ஆவடி: திருநின்றவூர், சம்பங்கி நகர், முதல் தெரு சேர்ந்தவர் மகேந்திரன் (38). இவர், அதே பகுதியில் சொந்தமாக டிராவல்ஸ் நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மகேந்திரன் அதே பகுதி, செல்வராஜ் நகரில் உள்ள ஒரு மளிகை கடையில் தண்ணீர் கேனை ஏற்றி ஆட்டோவில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். அப்போது அவரது ஆட்டோவை 5பேர் கொண்ட கும்பல் வழிமறித்து மகேந்திரனிடம் தகராறில் ஈடுபட்டு அவரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டியுள்ளனர். பின்னர், அவர்களுக்கு பயந்து மகேந்திரன் மளிகை கடைக்குள் புகுந்துள்ளார். அந்த கும்பல் அவரை விடாது துரத்தி கடைக்கு உள்ளே மகேந்திரனை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து தனிப்படை அமைத்து டிராவல்ஸ் அதிபரை கொலை செய்த 5பேர் கொண்ட கும்பலை தேடி வந்தனர்.

மேலும் விசாரணையில், மகேந்திரனை கொலை செய்தது திருநின்றவூர், அண்ணா நகர், கம்பர் தெருவை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (27), அபிமன்யு (21), கிஷோர் (20), அதே பகுதி செல்வராஜ் நகரை சேர்ந்த தமிழ்மாறன் (20),  அதே பகுதி கன்னிகாபுரத்தை சேர்ந்த அதிஷ்குமார் (22) ஆகியோர் என தெரியவந்தது. பின்னர், தலைமறைவாக இருந்த 5 பேரையும் தனிப்படை போலீசார் நேற்று மாலை பிடித்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியது:- முக்கிய குற்றவாளியான தமிழ்ச்செல்வன், தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு  ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை மகேந்திரன் அடிக்கடி தட்டி கேட்டுள்ளார்.

இதனையடுத்து, இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. மேலும்,  இருவருக்கும் இடையே இரு ஆண்டுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், தமிழ்ச்செல்வன் மகேந்திரனை தாக்கி மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து புகாரின் அடிப்படையில் திருநின்றவூர் போலீசார் தமிழ் செல்வனை கைது செய்துள்ளனர். இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் தமிழ்செல்வன், மகேந்திரனுக்கு இடையே நடுரோட்டில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும், நேற்று முன்தினம் மதியமும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழ்ச்செல்வன், தனது நண்பர்களான தமிழ்மாறன், அதிஷ்குமார், அபிமன்யு, கிஷோர் ஆகியோருடன் சேர்ந்து மகேந்திரனை கொலை செய்ய திட்டமிட்டு அவர் ஆட்டோவில் வரும்போது சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் தமிழ்ச்செல்வன் உட்பட 5பேரையும் கைது செய்தனர்.

Tags : travel agent ,murder ,Five ,prime suspect , Travels Chancellor, murder, main culprit, 5 people arrested
× RELATED வாக்கு என்பது நீங்கள் செலுத்தும்...