சமையல் எரிவாயு நிரப்பும் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியர்கள் 36 பேருக்கு கொரோனா: 50 லட்சம் காப்பீடு செய்யகோரி ஆர்ப்பாட்டம்

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் இந்தியன் ஆயில் சமையல் எரிவாயு நிரப்பும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. வளைகுடா நாடுகளில் இருந்து கப்பல் மூலம் எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு வரும் எரிவாயு குழாய் வழியாக இந்த தொழிற்சாலைக்கு கொண்டு வரப்பட்டு சிலிண்டர்களில் நிரப்பப்படுகிறது. இங்கு 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காலத்திலும் அத்தியாவசிய சேவையென்பதால் இங்கு தொழிலாளர்கள் கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த தொழிற்சாலையில் தற்போது 36 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பூவிருந்தவல்லி அருகே தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சக தொழிலாளர்கள் கொரோனா அச்சத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் இந்த ஆலையின் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு விதிமுறைகளை பின்பற்றி 33சதவீத தொழிலாளர்களை பயன்படுத்தாமல் 100சதவீத தொழிலாளர்களை ஈடுபடுத்தியதால் தற்போது அனைவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். முகக்கவசங்கள், கையுறை, பாதுகாப்பு உடை உள்ளிட்ட கொரோனா பாதிகாப்பு சாதனங்கள் முறையாக வழங்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினர்.  மத்திய அரசு அறிவித்தது போல தொழிலாளர்களுக்கு 50லட்ச ரூபாய் காப்பீட்டு திட்டம் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: