சமூகநீதியின் அடிப்படைக்கு எதிரானது கிரீமிலேயர் முறையை கைவிட வேண்டும்: மத்திய அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: சமூக நீதியின் அடிப்படைக்கு எதிரானது கிரீமிலேயர் முறையைக் கைவிட வேண்டும்  என்று மத்திய அரசுக்கு விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் போது ‘’கிரீமிலேயர்’’ வருமான வரம்பைக் கணக்கிடுவதில் புதிய அம்சங்களை சேர்க்கும் மத்திய அரசின்  முயற்சியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். கிரீமிலேயர் முறையை முற்றாகக் கைவிடவேண்டும் எனவும் அதற்காக எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும்.

மண்டல் கமிஷன் வழக்கில் 1992ம் ஆண்டு தீர்ப்பளித்த 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு பிற்படுத்தப் பட்டோருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதிசெய்தது. ஆனால், பிற்படுத்தப்பட்டோரில் பொருளாதார ரீதியில் முன்னேறியவர்களுக்கு இட ஒதுக்கீடு தரக்கூடாது எனக் கூறி ‘கிரீமிலேயர்’ என்ற பொருளாதார அளவுகோலை உருவாக்கியது. 2008ம் ஆண்டு 4.5 லட்சம் என ஐக்கிய முன்னணி அரசு அந்த வருமான வரம்பை உயர்த்தியது. அதன்பின்னர் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அந்த வரம்பை ரூ.12 லட்சமாக உயர்த்துமாறு கடிதம் அளித்து வலியுறுத்தினோம். அதனடிப்படையில் 2013 மே மாதத்தில் கிரீமிலேயர் வரம்பை ரூ.6 லட்சமாக மட்டும்  உயர்த்தி மத்திய அரசு ஆணை வெளியிட்டது. அது 2017ம் ஆண்டு ₹8 லட்சமாக உயர்த்தப்பட்டது.

கிரீமிலேயர் வரம்பை இந்த ஆண்டு சீராய்வு செய்ய வேண்டிய நிலையில் அதனைன ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும் என இப்போது மத்திய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அதற்கு எந்த பதிலையும் சொல்லாத மத்திய அரசு, கிரீமிலேயரைக் கணக்கிடும் போது  பெற்றோரின் சம்பளம் மற்றும் விவசாய வருமானத்தையும் சேர்த்து அரசு திருத்தம் கொண்டு வருகிறது. இதனால் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் இட ஒதுக்கீடு பெற முடியாமல் ஆக்கப்படுவர். இது பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டு உரிமையை முற்றாக ஒழிப்பதற்கான சதியாகும். இந்த சமூக அநீதியை மத்திய அரசு உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் சிலர் பங்கேற்கும் இணையவழி கண்டனக் கூட்டம் இன்று (10ம் தேதி) மாலை 7 மணிக்கு விசிக சார்பில் ஒருங்கிணைக்கப்படுகிறது.

Related Stories: