மின்சார துறை அமைச்சர் தங்கமணியை தொடர்ந்து மனைவி, மகன், மருமகள், டிரைவருக்கும் கொரோனா பாதிப்பு: அனைவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: தமிழக மின்சார துறை அமைச்சர் தங்கமணியை தொடர்ந்து அவரது மனைவி, மகன், மருமகள், அமைச்சரின் கார் டிரைவர் உள்ளிட்டோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதை தொடர்ந்து, அவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், காவலர்கள், அரசு அதிகாரிகள் என ஒருவரையும் இந்த கொரோனா ஆட்கொல்லி நோய் விட்டு வைக்கவில்லை. தற்போது கொரோனாவின் கோரதாண்டவத்தால் தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கடந்த மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து அதிமுக மற்றும் திமுக எம்எல்ஏக்கள் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், கடந்த 20 நாட்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். பெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழனி, கொரோனா நோய்க்கு 25 நாட்களாக சிகிச்சை பெற்று சில நாட்களுக்கு முன்தான் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழக மின்சார துறை அமைச்சர் பி.தங்கமணியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அவரது மகன் தரணிதரனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அமைச்சர் வீட்டில் உள்ளவர்கள், வேலையாட்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அமைச்சரின் மனைவிக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் சேலத்தில் இருந்து காரில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும், மருமகளுக்கும், அவரது இரண்டு கார் டிரைவர்களுக்கும் நேற்று காலை கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அவர்களும் உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை அமைச்சர் தங்கமணியுடன் தொடர்பில் இருந்த அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், அரசு உயர் அதிகாரிகள், அவரது அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் அமைச்சர் வேலுமணி நேற்று முன்தினம் பரிசோதனை செய்தார். அவருக்கு முடிவு வரவில்லை. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சில அமைச்சர்கள், தலைவர்கள் சிலர் நேற்று கொரோனா பரிசோதனை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

* அமைச்சர்கள் பாதிப்பால் அதிகாரிகள் அதிர்ச்சி

தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மூத்த அமைச்சர்களான தங்கமணி, அன்பழகன் ஆகிய 2 பேர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபோன்று அமைச்சர்கள் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுவது முதல்வர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தாங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் சமூக இடைவெளியை பின்பற்றி உடல்நலத்தை பாதுகாக்க முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories: