×

கொரோனாவால் பாதிக்கும் நோயாளிகள் மனரீதியாக பாதிக்கப்படுவதாக புகார் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு இடையே தடுப்புகள் வைக்க தடை

* ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த  தடுப்புகளை அகற்றவும் அறிவுரை
* மருத்துவ நிபுணர்கள் பொதுப்பணித்துறைக்கு அறிவுரை

சென்னை: கொரோனா பாதிக்கும் நோயாளிகள் மனரீதியாக பாதிக்கப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு இடையே தடுப்புகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி இருப்பதாக அறியப்படுபவர்கள் உடனடியாக மருத்துவமனையில் பரிசோதனைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வாறு, பரிசோதிக்கும்போது அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்படும் நிலையில், அவர்களுடைய பாதிப்பு மூன்று நிலைகளாக பிரிக்கப்படுகிறது. அதாவது, குறைவான பாதிப்பு, நடுநிலையான பாதிப்பு, அதிகமான பாதிப்பு என்கிற அடிப்படையில் அவர்கள் பிரிக்கப்படுகின்றனர்.

இதில், குறைவான பாதிப்பு உள்ளவர்கள் வீட்டில் இருந்தும், நடுநிலை மற்றும் அதிகமான பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக, அவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டு பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வார்டுகள் அமைக்கப்படும்போது ஒவ்வொரு படுக்கைகளுக்கு இடையே தடுப்புகள் அமைக்கப்படுகிறது. அவ்வாறு ஒரு படுக்கைக்கும் இன்னொரு படுக்கைக்கும் இடையே தடுப்புகள் அமைப்பதன் மூலம் அருகில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்கள் யார் என்பது தெரியக்கூடாது என்பதற்காகவும், அருகில் உள்ளவர்களால் பாதிப்பு மீண்டும் வரக்கூடாது என்பதற்காக அமைக்கப்பட்டன. பொதுவாக கொரோனா வார்டில் அனுமதிக்கப்படும் நபர்கள் குறைந்தபட்சம் 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை மருத்துவமனையில் இருக்கின்றனர். அவர்களால் அருகில் உள்ளவர்களிடம் பேச முடியாத நிலை இருப்பதால், மனரீதியாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

மேலும், அவர்கள் தனியாகவே இருப்பதால் அவர்கள் மருத்துவமனையை விட்டு வெளியே வருவதற்குள் மனநிலை ரீதியாக பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர்.இதையடுத்து அரசு மருத்துவமனைகளில் ஒவ்வொரு படுக்கைகளுக்கும் இடையே தடுப்புகள் அமைப்பதை அகற்ற பொதுப்பணித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், புதிதாக கொரோனா வார்டு ஏற்படுத்தும் போது, படுக்கைகளுக்கு இடையே தடுப்புகளை அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மருத்துவமனைகளில் ஒருவரையொருவருடன் மனம் விட்டு பேசிக்கொள்ள முடியும். அதே நேரத்தில் அரசுக்கு ஏற்படும் செலவும் குறையும் என்று மருத்துவ நிபுனர்கள் சிலர் தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறும் போது, மருத்துவமனைகளில் நடுநிலை, அதிக பாதிப்பு என்கிற அடிப்படையில் தான் அனுமதிக்கப்படுகின்றனர். அங்குள்ளவர்கள் அனைவருமே பாதிப்பு உள்ளவர்கள் தான். எனவே, படுக்கைகளுக்கு இடையே தடுப்புகள் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், அவர்கள் 14 நாட்கள் வரை தனியாக இருந்தால் மன ரீதியான பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. அவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டாலும் தனியாக இருப்பதால், அவர்களுக்கு அந்த பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது.

எனவே, தான் தடுப்புகள் இல்லாமல் இருந்தால் ஒருவர் மற்றொருவருடன் சகஜமாக பேச வாய்ப்பு கிடைக்கும் என்பதால் அதை அகற்றினோம். தற்போது தனி அறையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்கள் கூட தாங்களும் பொதுப்பிரிவு படுக்கைக்கு வந்து விடுகிறோம். எங்களுக்கு தனியாக இருந்தால் மன உளைச்சலாக இருக்கிறது என்கின்றனர். இதனாலேயே தற்போது தடுப்புகள் அனைத்தையும் எடுக்க சொல்லி விட்டோம். மேலும், புதிதாகவும் தடுப்புகள் அமைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Government hospitals , Corona, patients, mentally, complaining, government hospital, bed, blockages, ban
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளில்...