×

கொரோனா போன்ற தாக்குதலை தவிர்க்க விலங்கிடம் இருந்து மனிதர்களுக்கு நோய் பரவாமல் தடுக்க வேண்டும்: ஐ.நா. ஆய்வறிக்கை தகவல்

நியூயார்க்: ‘விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ் நோய்களை தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், கொரோனா போன்ற நோய்கள் அதிகளவில் பரவும்,’ என்று ஐ.நா. ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் செயல்படும் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் சர்வதேச கால்நடை ஆராய்ச்சி நிறுவனம், `அடுத்த தொற்றை தடுத்தல்: விலங்குகளிடம் இருந்து பரவும் நோய்கள் மற்றும் அதன் பரவலைத் தடுத்தல்’ என்ற ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

இந்த ஆய்வறிக்கை குறித்து ஐநா சுற்றுச்சூழல் திட்டத்தின் அறிவியல் ஆய்வுக்கான தலைவர் மார்டென் கபெல் கூறுகையில், ‘‘கடந்த 1918-19ல் ஏற்பட்ட காய்ச்சல் தொற்று போன்று 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொள்ளை நோய் பரவும் என்று மக்கள் நினைக்கின்றனர். ஆனால், அது உண்மையல்ல. இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையில் சமனறற நிலை ஏற்படும் போதெல்லாம் இவ்வகை நோய்கள் பெருகி பரவுகிறது,’’ என்று கூறினார்.  ஐநா. சுற்றுச்சூழல் திட்டத்தின் பொதுச் செயலாளரும், நிர்வாக இயக்குநருமான இங்கர் ஆண்டர்சன் கூறியதாவது:

கோவிட்-19  என்பது  விலங்குகளிடம் இருந்து பரவும்  நோய்களில் மிகவும் மோசமான ஒன்றே தவிர, முதல் முறையாக ஏற்பட்டுள்ள கொடிய நோய் அல்ல. இதற்கு முன்பு எபோலா, சார்ஸ், மெர்ஸ், எச்ஐவி, லைம், ரிப்ட் வேலி காய்ச்சல், லாசா காய்ச்சல் ஆகியவற்றை கடந்து வந்துள்ளோம். கடந்த நூற்றாண்டில் மட்டும் ஆறு புதிய வகை கொரோனா வைரஸ்களை உலகம் பார்த்துள்ளது.  விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ், மோசமான பாதிப்பை ஏற்படுத்தி மரணத்தை விளைவிக்கும்,’’ என்றார். கொரோனா வைரசினால் உலகளவில் இதுவரை 5 லட்சம் பேர் இறந்துள்ளனர்.

1996ல் பறவை காய்ச்சல், 1998ல் நிபா வைரஸ், 2003ல் சார்ஸ், 2016ல் பன்றி காய்ச்சல் என அனைத்தும் சீனாவில் இருந்து தோன்றியதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காடுகளையும், இயற்கை வளங்களையும் அழிப்பதை நாடுகள் நிறுத்த வேண்டும். விவசாயத்தை பாதுகாத்து, மரங்களை வளர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். கொரோனா தொற்றின் மூலம் இயற்கை இதனை நமக்கு எச்சரித்துள்ளது. தொற்று ஏற்படும் என்று உணர்ந்த நாம், அதனை எதிர்கொள்ள தயாராகவில்லை. ஆனால் இப்போது, அடுத்த தொற்று பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையில் சமனற்ற நிலை ஏற்படும் போதெல்லாம் கொரோனா போன்ற கொடிய நோய்கள் பெருகி பரவுகின்றன.
* கடந்த நூற்றாண்டில் மட்டும் ஆறு புதிய வகை கொரோனா வைரஸ்களை உலகம் பார்த்துள்ளது.
* காடுகளையும், இயற்கை வளங்களையும் அழிப்பதை நாடுகள் நிறுத்த வேண்டும். விவசாயத்தை பாதுகாத்து, மரங்களை வளர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.

Tags : invasion ,human beings , Corona, animal, human, to prevent disease, UN Thesis, Information
× RELATED ஜே.பி.நட்டாவைத் தொடர்ந்து ஒன்றிய...