புதுச்சேரி பட்ஜெட் 16ம் தேதி தாக்கல்?

புதுச்சேரி: புதுச்சேரி மாநில பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இம்மாதம் 16ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. புதுச்சேரி சட்டசபையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால், மத்திய அரசின் அனுமதி, மானியம் கிடைப்பதில் காலதாமதம், நிதி நெருக்கடி, நிதி தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பட்ஜெட் தாக்கல் செய்தில் காலதாமதம் ஏற்படுகிறது. அவ்வப்போது அரசின் செலவினங்களுக்காக இடைக்கால பட்ஜெட் போடப்படும். அதற்கு பதிலாக ஜூன், ஜூலை மாதங்களில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

கடந்த ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது, இந்த மாதம் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. சுமார் ரூ. 9500 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டு, திட்ட வரையறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக மாநில வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பட்ஜெட்டின் மொத்த தொகையில் சில திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது. இதையேற்று சில திருத்தங்களுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை மற்றும் நிதித்துறை அனுமதி கிடைத்துள்ளதால் புதுச்சேரி சட்டசபையில் இந்த மாதம் 15 அல்லது 16ம் தேதிகளில் பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக நாளை அமைச்சரவை கூட உள்ளது. அதில், பட்ஜெட்டில் இடம்பெறும் அம்சங்கள் குறித்தும் புதிய அறிவிப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் புதுச்சேரி அரசு தாக்கல் செய்ய உள்ள இந்த பட்ஜெட் மக்களிடம் பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக துணை நிலை ஆளுனர், தேர்வு செய்யப்பட்ட அமைச்சரவைக்கும் இடையே தொடர் மோதல் போக்கால் மாநில வளர்ச்சி திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் அரசின் முழுமையான பட்ஜெட் இந்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்ஜெட் கூட்டத்திற்காக புதுச்சேரி சட்டசபை மைய மண்டபம் தூய்மைப்படுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றை தவிர்க்கும் பொருட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும், இரண்டு அல்லது மூன்று நாட்களில் கூட்டத்தை முடிக்கவும் அரசு தரப்பு திட்டமிட்டுள்ளது.

Related Stories: