×

நகராட்சி கமிஷனர் பணியிடம் காலி; அருப்புக்கோட்டையில் கொரோனா தடுப்பு பணிகள் முடக்கம்: மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா?

அருப்புக்கோட்டை: கமிஷனர் பணியிடம் காலியாக உள்ளதால் அருப்புக்கோட்டையில் கொரோனா தடுப்பு பணிகள் முடங்கியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகராட்சியில் அடிக்கடி கமிஷனர் மாறுதல் வழக்கமாக உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இங்கு பணிபுரிந்த கமிஷனர் ஓய்வு பெற்றுவிட்டார். அவருக்கு பதிலாக புதிய கமிஷனர் நியமிக்காமல் விருதுநகர் நகராட்சி கமிஷனர் கூடுதல் பொறுப்பாக அருப்புக்கோட்டைக்கு நியமிக்கப்பட்டார். பொறுப்பேற்ற சில நாட்களிலேயே கொரோனா பணிக்காக சென்னைக்கு மாற்றுப்பணிக்கு அனுப்பப்பட்டார்.

பின்னர் நகராட்சி பொறியாளருக்கு கமிஷனர் பொறுப்பு வழங்கப்பட்டது. அவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பதவி உயர்வில் சென்றுவிட்டார். மேலும் நகர்நல அலுவலராக சில நாட்களுக்கு முன்பு ஒருவர் நியமிக்கப்பட்டு அவரும் கொரோனா பணிக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டார். இதனால் நகராட்சியில் பணிகள் பாதிப்படைந்துள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்,‘‘ அலுவலர் பணியில் முக்கிய முடிவுகளை கமிஷனர் தான் எடுக்க வேண்டும். கமிஷனர் இல்லாததால் நிர்வாக சிக்கல் ஏற்பட்டுள்ளது.  பொறுப்பு யாருக்கும் வழங்கப்படாததால் கோப்புகள் தேக்கம் அடைந்துள்ளது.

மக்களுக்கு உள்ளாட்சி திட்டங்களின் வளர்ச்சி பணிகள் முற்றிலும் முடங்கி விட்டது. கமிஷனர் பொறுப்பு இல்லாமல் பிரதிநிதியாக மேலாளர் அலுவலகத்தில் நிர்வாகம் செய்து வருகிறார். இவரால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. இன்ஜினியர் பணியிடமும் காலியாக இருப்பதால் தற்போது குடிநீர் பிரச்சனை உள்ள நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. கொரோனா தொற்று பரவல் தடுப்பு பணிகள் துரித நடவடிக்கை இல்லாமல் முடங்கி உள்ளது. மக்களும் அடிப்படை பிரச்னை குறித்து மனு கொடுக்க முடியவில்லை. போர்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய பணிகள் முடங்கி உள்ளது.

நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்த நகரமைப்பு ஆய்வாளருக்கு கொரோனா தொற்றால் ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர். முக்கியமாக, அலுவலகத்தில் அதிகாரிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் கமிஷனர், இன்ஜினியர் பணியிடங்களுக்கு இன்சார்ஜ் என இல்லாமல் நிரந்தரமாக நியமிக்க வேண்டும்,’’என்றனர்.

Tags : commissioner ,Coronation ,Aruppukkottai ,District Administration ,District Administration Notices ,Coronation Blockade , Aruppukkottai, Corona Block works, freeze
× RELATED சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணி...