சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு!: பென்னிக்ஸ் நண்பர்கள் 5 பேரிடம் சிபிசிஐடி விசாரணை..அரசு சாட்சியான ரேவதியும் ஆஜர்!!!

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை - மகன் இரட்டை கொலை வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி அதிகாரிகள் பென்னிக்சின் 5 நண்பர்களிடம் விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள். மேலும் அரசு சாட்சியாக மாறியுள்ள காவலர் ரேவதியும் விசாரணைக்கு ஆஜராகியிருக்கிறார். இதுவரை 20 பேருக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்றுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காலை 12 மணி முதல் மதியம் 2 மணி வரை சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் மற்றும் சிபிசிஐடி எஸ்.பி. விஜயகுமார், விசாரணை அதிகாரி அனில்குமார் ஆகியோர் சுமார் 2 மணி நேரம் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, இறந்த பென்னிக்சின் நண்பர்கள் 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் பென்னிக்சின் நண்பர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து, மீண்டும் இன்று இரண்டாம் கட்டமாக அவர்கள் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். அதேமாதிரி இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக மாஜிஸ்திரேட்டிடம் சாட்சியம் அளித்த தலைமை காவலர் ரேவதியும் இன்று இரண்டாவது நாளாக தூத்துக்குடியில் உள்ள சிபிசிஐடி குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் ஆஜராகியுள்ளார்.

அவர்களிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய சிபிசிஐடி ஐ.ஜி. சாத்தன்குளத்தில் தங்களது விசாரணை தொடர்ந்து நடைபெறும் எனவும், தாங்கள் இதுவரை 20 நபர்களிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்துள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கின் முக்கிய ஆவணங்கள் மற்றும் தரவுகள் அனைத்தும் நாளை சிபிஐ -யிடம் அளிக்கப்படவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: