சீர்காழியில் பாசன கால்வாய்களில் கடல்நீர் உட்புகுந்ததால், விளைநிலங்கள் அழியும் அபாயம்: விவசாயிகள் வேதனை!!!

நாகை:  நாகை மாவட்டம் சீர்காழி அருகே கடைமடை பாசன கால்வாய்களில் கடல் நீர் உட்புகுந்து விடுவதால் 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேட்டூர் அணை திறக்கப்பட்ட போதிலும், குடிமராமத்து பணிகள் முறையாக நடைபெறாததால், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வருவதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், தண்ணீர் தற்போது வந்தபோதிலும், கதவணைகள் தரமாக இல்லாததால், மணல் மூட்டைகளை அடுக்கியும் தண்ணீரை தடுக்க முடியவில்லை.

இதனால், பாசன வாய்க்கால்களில் 10 கி.மீ தொலைவிற்கு கடல் நீர் உள்ளே வந்து விட்டதால், வழுத்தலை உள்ளிட்ட 27 கிராமங்களில் உள்ள விளைநிலங்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், கடல் நீர் விளைநிலங்களில் புகுந்து விட்டதால், அங்கு நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிகரித்து விட்டதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த உப்பு நீரால் விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பருத்தி செடிகள் அனைத்தும் சிவந்த நிலையில் காணப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனைத்தொடர்ந்து, குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களிலும் உப்பு தன்மை அதிகரித்து விட்டதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால், பாசன வாய்க்கால் வழியாக கடல் நீர் உள்ளே வருவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடல் நீர் வராமல் தடுப்பதற்காக 1500 கோடி ரூபாய் செலவில் அரசு அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: