×

நிலுவையில் உள்ள சொத்து வரியை உடனே செலுத்துமாறு அறிவிப்பு வெளியிட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்: வரி வசூலை 6 மாதங்களுக்குத் தள்ளிவைக்க கோரிக்கை!

சென்னை: நிலுவையில் உள்ள சொத்து வரியை உடனே செலுத்துமாறு அறிவிப்பு வெளியிட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கின்ற நிலையில், நிலுவையில் உள்ள மற்றும் இந்த ஆண்டுக்கான சொத்து வரியை உடனடியாக எவ்விதத் தாமதமும் இன்றி செலுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் பத்திரிகைகளில் அறிவிப்பு வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குரியது. கடந்த மார்ச் மாதம் முதல் சென்னையிலிருந்து வெளியூர் போனவர்கள் திரும்பி வரவில்லை. வேலை, தொழில், சுய தொழில், வியாபாரம் உள்ளிட்ட அனைத்து வருமானத்தையும் இழந்துள்ளனர். தங்கள் வாழ்க்கையை இனி ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டுமோ என்ற மிகப்பெரிய அச்சத்தில் சென்னைவாசிகள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுபோன்ற இக்கட்டான தருணத்தில் சொத்து வரி செலுத்துங்கள் என்று எச்சரிக்கை விடுவது மனித நேயமற்றது. ஊழல்களுக்கு குறிப்பாக, கொரோனா கால ஊழலுக்கு புகலிடமாகத் திகழும் சென்னை மாநகராட்சி கமிஷன் வசூல் செய்வதற்கான டெண்டர்களை ரத்து செய்து நிதி நிலைமையைச் சரி செய்யலாம். ஆனால், அது போன்ற டெண்டர்களை அனுமதித்துக் கொண்டே வருவாய் என்ற காரணம் காட்டி சொத்து வரியை உடனே செலுத்துங்கள் என்று சென்னை மாநகராட்சி கெடுபிடி செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே, சென்னை மாநகராட்சியின் சொத்து வரி வசூல் அறிவிப்பைத் திரும்பப் பெற்று, இந்த வரி வசூலைக் குறைந்தபட்சம் இன்னும் ஆறு மாதங்களுக்காவது தள்ளிவைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன், என கூறியுள்ளார்.Tags : MK Stalin , Property Tax, MK Stalin, Condemnation, Madras Corporation
× RELATED சத்துணவு ஊழியரின் ஊதிய பிடித்தம் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்