குடும்பப் பிரச்னையில் மனைவிக்கு கத்திக்குத்து போலீசுக்கு பயந்த வாலிபர் கிணற்றுக்குள் ‘தலைமறைவு’:தீயணைப்புத்துறை மூலம் மீட்டு விசாரணை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே, குடும்ப பிரச்னையில் மனைவியை கத்தியால் குத்திய கணவன், போலீசார் விசாரணைக்கு பயந்து கிணற்றில் பதுங்கினார். போலீசார் அவரை தீயணைப்புத்துறை மூலம் மீட்டு விசாரிக்கின்றனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள மறவபட்டியைச் சேர்ந்தவர் சடையாண்டி (27), கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி (22). இவர்களுக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. குடும்பப் பிரச்னை தொடர்பாக தம்பதி இடையே நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த சடையாண்டி மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.படுகாயம் அடைந்த ஈஸ்வரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். போலீசார் விசாரணைக்கு பயந்த சடையாண்டி, அருகில் உள்ள 50 அடி ஆழ விவசாயக் கிணற்றில் இறங்கி பதுங்கிக் கொண்டார். தகவலறிந்த ஆண்டிபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு நேற்று சென்று கிணற்றுக்குள் இருந்த சடையாண்டியை, தீயணைப்புத்துறை மூலம் கயிறு கட்டி மீட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஆண்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: