ஈரோடு மாவட்டத்திற்குள் நுழைய கொரோனா மருத்துவ பரிசோதனை சான்று அவசியம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்திற்குள் நுழைய கொரோனா மருத்துவ பரிசோதனை சான்று அவசியம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய வேகம் எடுத்து பரவி வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தொற்று 2-வது கட்டமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் நேற்று  புதிதாக 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

நேற்று புதிதாக, ஈரோடு மாநகராட்சி மூலப்பாளையம், கங்காபுரம், டீச்சர்ஸ் காலனி போன்ற இடங்களில் எட்டு பேருக்கும், கோபி கணபதிபாளையத்தில் ஒருவருக்கும், கவுந்தப்பாடியில் ஒருவருக்கும் என, பத்து பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 296 ஆக உயர்ந்தது. இதுவரை 89 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 202 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கையாக ஈரோடு மாவட்டத்திற்குள் நுழைய கொரோனா மருத்துவ பரிசோதனை சான்று அவசியம் என்று அம்மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவிட்டுள்ளார். மேலும் நோய் பரவுவதை தடுக்க பல்வேறு கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Related Stories: