முதல்வர் பழனிசாமிக்கு இதயத்தில் ஈரம் இருந்தால் மின்கட்டணம் சலுகைகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: முதல்வர் பழனிசாமிக்கு இதயத்தில் ஈரம் இருந்தால், மின்கட்டணம் குறித்த சலுகைகளைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவது எளிதானதே என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: மின்சாரச் சட்ட விதிகளின்படி ஊரடங்கு காலத்தின்போது முந்தைய மின் கட்டணத் தொகையை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே புதிய மின் கட்டணம் கணக்கிடப்பட்டுள்ளது” என்று அதிமுக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து- மின் நுகர்வோரின் துயரத்தை உணர மறுப்பதற்கு மிகுந்த கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘மின்சாரச் சட்ட விதிகளை’’ உயர் நீதிமன்றத்தில் மேற்கோள் காட்டி, அளவுக்கு அதிகமான மின்கட்டணம் வசூலிக்கும் இந்த அநியாய உத்தரவை அதிமுக அரசு நியாயப்படுத்துவது வேதனையாக இருக்கிறது.

அதே அரசு மின்சாரச் சட்டம், 2003ல் உள்ள பிரிவு 61ல் “நுகர்வோரின் நலனைப் பாதுகாக்கும் வகையில் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்” என்று இருப்பதை ஏன் முதலமைச்சர் வசதியாக மறந்து விட்டார்?

அந்தச் சட்டத்தின் கீழ் 2006ல் வெளியிடப்பட்ட ‘’கட்டணக் கொள்கை’’யின் நான்கு முக்கிய நோக்கங்களில், ‘’நியாயமான முறையில் நுகர்வோருக்குக் கட்டணம் நிர்ணயிப்பதை உறுதிப்படுத்துவது’’ முதன்மையான நோக்கம்! அதையும் ஏன் முதல்வர் மறந்து விட்டார்? அதிமுக அரசே மேற்கோள் காட்டும் மின்சாரச் சட்டம், 2003ன்படியே மின் நுகர்வோருக்கு ‘கொரோனா பேரிடரை’’ ஒரு சிறப்பு நேர்வாகக் கருதி மின் கட்டணத்தைக் குறைக்கலாம். அதில் எவ்விதத் தடையும் இல்லை. மனம் தான் முதலமைச்சருக்கும், அமைச்சருக்கும் தடையாக இருக்கிறது.

தமிழகத்தில் 200 முதல் 500 யூனிட்டிற்குள்ளும், 500 யூனிட்டிற்கு மேல் ஒரு யூனிட் அதிகமாக மின்சாரம் பயன்படுத்துவோரின் இல்லங்களுக்கு எல்லாம் கொடுக்கப்பட்டுள்ள ‘மின்கட்டணத் தொகை’’ மக்களின் இதயத்தைத் தாக்கும் ‘’எலெக்ட்ரிக் ஷாக்’’ ஆக அச்சுறுத்தி நிற்கிறது. ஆகவே, மின்சாரச் சட்டத்தின்கீழ் இருக்கும் ‘மின் நுகர்வோர் நலனைப் பாதுகாப்பது’’ என்ற அடிப்படைக் கோட்பாட்டினை மனதில் வைத்து, ஏற்கனவே பேரிடருக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட மின்கட்டணத்தின் அடிப்படையில் மின்கட்டணம் வசூல் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ரீடிங் எடுக்காததால், முந்தைய மாதத்தில் மின்நுகர்வோர் செலுத்திய மின்கட்டணத்திற்குரிய பணத்தைக் கழித்து பயனாளிகள் மீது தாங்கமுடியாத சுமையை ஏற்றாமல், அந்தப் பணத்திற்குரிய ‘ரீடிங்குகளை’’ கழித்து, மின்கட்டணத்தை மீண்டும் கணக்கிட்டு, மின் நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு மின்கட்டணம் செலுத்துவது-இனிவரும் நாட்களில் செலுத்த வேண்டிய மின் கட்டணம் ஆகியவற்றிற்கும் ‘மானியம்’’ அளிக்கவோ அல்லது நீண்டகாலத் தவணை முறையில் செலுத்தவோ ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையமே மின்சாரச் சட்டத்திற்குக் கட்டுப்பட்ட அமைப்பு என்பதாலும், இது கொரோனா பேரிடர் காலம் என்பதாலும், கட்டணச் சலுகையை மின் நுகர்வோருக்குக் கொடுப்பதில் அதிமுக அரசுக்கு எவ்வித தடையும் இருக்கப் போவதில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன். மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பதை விட, முதல்வர் பழனிசாமிக்கு இதயத்தில் ஈரம் இருந்தால், இந்த சலுகையைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவது எளிதானதே என்று நம்புகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* நாவலர் நூற்றாண்டை போற்றுவோம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

 நூறாண்டு கண்ட திராவிட இயக்க வரலாற்றில் தனக்கெனத் தனி முத்திரையைப் பதித்தவர் நாவலர். 1969 முதல் 1976 வரையிலான கலைஞர் தலைமையிலான அரசில் நிறைவேற்றப்பட்ட எண்ணற்ற திட்டங்களுக்கும், வள்ளுவர் கோட்டம் - பூம்புகார் கலைக்கூடம் போன்ற கவின்மிகு கட்டிடக்கலைகளுக்கும் துணையாக நின்று நிறைவேற உதவியவர். மாற்று முகாம் சென்ற நிலையிலும் அவர் மீது கொண்ட அன்பு என்றும் மாறாமல் ‘நாவலர்’ என்றே எப்போதும் குறிப்பிட்டவர் கலைஞர். ஓராண்டுக் காலம் ஓடிவிட்ட நிலையில், நாவலர் நூற்றாண்டு விழா குறித்து தமிழக அரசின் சார்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படாதது வேதனை அளிக்கிறது. அதனால், நாவலரை என்றும் மறவாத திமுகவின் சார்பில் அவரது ‘நூற்றாண்டு நிறைவு விழா’ ஜூலை 11ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. அன்றைய தினம், அறிவாலயத்தில் நாவலரின் திருவுருவப்படத்திற்கு, மரியாதை செலுத்திப் போற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெறும். இதை கொண்டாடி, நாவலரின் புகழினைப் போற்றுவோம் என கூறியுள்ளார்.

Related Stories: