சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் அதிகார பலத்தின் தலையீடு உள்ளது: உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு

சென்னை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் அதிகப்படியான அதிகார பலத்தின் தலையீடு உள்ளதால், அதனை விசாரிக்க உச்ச நீதிமன்றத்தின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என நேற்று உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சுமார் 12 குழுக்களாக சென்று விசாரணை நடத்திய அதிகாரிகள் தந்தை, மகன் மரணமடைந்த விவகாரத்தை கொலை வழக்காக பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி தற்போது 10க்கும் மேற்பட்ட போலீசாரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு தரப்பு வழக்கை சிபிஐ விசாரிக்க நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது. இதை தொடர்ந்து சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை விவகாரத்தில் தற்போது சிபிஐ இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விரைவில் விசாரணையும் நடத்த உள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் இறந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பீப்புல் சாரியோட்டீர் என்ற தொண்டு நிறுவனம் தரப்பில் நேற்று ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “தந்தை, மகன் இறந்த விவகாரத்தில் அதிகாரப் பலம் என்பது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதனை உடனடியாக தடுக்க வேண்டும்.

அதேபோல் போலீசார் விசாரணை என்ற பெயரில் அதிகப்படியான மரணங்கள், துன்புறுத்தல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் ஆகியவை நடக்கிறது. அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதுபோன்ற விவகாரத்தில் முன்னதாக உள்ள சட்ட நடைமுறைகளை மாற்றி அமைக்கவோ அல்லது அதனை பரிசீலனை செய்யவோ ஏதுவாக உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் ஒரு தன்னாட்சி குழுவை அமைத்து செயல்பட வைக்க, மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஏற்கனவே சாத்தான்குளம் விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் ராஜராஜன் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் ஒரு தன்னாட்சி குழுவை அமைத்து செயல்பட வைக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

Related Stories: