×

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் நீட் நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் நீட் நுழைவுத் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  இது குறித்து திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இடஒதுக்கீட்டின் பின்னணியில் உள்ள அடிப்படை காரணி சமூக மற்றும் கல்வியில் பின் தங்கிய நிலை தானே தவிர பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை அல்ல. பொருளாதார அளவுகோல் என்பது இட ஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கத்திற்கு எதிரானது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில், கிரிமிலேயரை வகைப்படுத்துவதற்கான வருவாய் ஆய்வு வரம்பிற்குள் அவர்களது சம்பளத்தைச் சேர்ப்பது என்பது, இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தொடர்ந்து சந்தித்து வரும் சமூகத் தடைகளைப் புறக்கணிப்பது போன்றதாகும். இடஒதுக்கீட்டின் உண்மையான சாராம்சத்தில் கிரிமிலேயர் என்பது இல்லை. எனவே, கிரிமிலேயர் என்ற கருதுகோள் குறித்து, பி.பி.சர்மா குழு அளித்துள்ள பரிந்துரைகளை நிராகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.  

36 ஆண்டுகளுக்குப் பின் ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகரித்துள்ள மருத்துவ இடங்களின் அடிப்படையில் இந்த ஒதுக்கீட்டின் தேவை இனி பொருந்தாது. மாறிவரும் தேவைகளைக் கருத்தில் கொண்டு மருத்துவ படிப்பு என்பது நாடாளுமன்றத்தாலும், நிர்வாகத்தாலும் நிர்வகிக்கக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் ஏராளமான மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன என்பதையும், பிற மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்கள் போட்டியிடுவதற்கான இடங்களை ஒதுக்குவதற்கான தேவை பெருமளவில் குறைந்து விட்டதையும் கவனத்தில் கொண்டு அகில இந்திய ஒதுக்கீடை மத்திய அரசு ரத்து செய்து விடமுடியும். அதற்கு பதிலாக, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டவை போக, மீதமுள்ள இடஒதுக்கீடு கோட்டா அல்லாத குறிப்பிட்ட சதவீத இடங்களில், பிற மாநில மாணவர்கள் போட்டியிட முடியும். இந்த வகையில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கென குறிப்பிட்ட சதவீத இங்களை தனியாக ஒதுக்கீடு செய்ய வேண்டிய தேவை இருக்காது.

நீட் தேர்வு அறிமுகம் தமிழ்நாட்டின் மருத்துவ கல்வியில் கடுமையான பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளது. முதலாவதாக மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்துவதற்கான மாநிலத்தின் உரிமையை இந்த தேர்வு முற்றிலுமாக அழிக்கிறது. மத்திய அரசு தன்னிச்சையாக ஒரு உத்தரவைப் பிறப்பிப்பது என்பது, அரசியலமைப்புச் சட்டத்தின் அட்டவணை 7ன் பட்டியல் 3ன்கீழ் பொதுப்பட்டியலில் உள்ள இதன் மீதான மாநில அரசின் உரிமையைக் குறைப்பதோடு மருத்துவக் கல்வியின் கூட்டாட்சி அமைப்பு மீறப்படுகிறது. அதோடு நீட் தேர்வானது, பல்வேறு மாநிலங்களில் பல்வேறு பாடத்திட்டங்கள் மற்றும் பாடப் புத்தகங்களை மாநில கல்வித் திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்களை விட சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கே சாதகமான ஒன்று என்பது வெளிப்படையானது. இந்த அணுகுமுறை கல்வித்தரத்தில் வேறுபாடுகள் ஏற்பட வழிவகுத்து விடுகிறது. இது மற்ற பாடத்திட்டங்களின் கீழ் படித்த மாணவர்களுக்கு அநீதி இழைப்பதாகும்.

இறுதியாக நீட் தேர்வு நடத்தப்படும் கடந்த 3 ஆண்டுகளாக இத்தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறவும் தேர்வு பெறுவதற்காகவும் தனியார் பயிற்சிக் கூடங்களை மாணவர்கள் நாட வேண்டியுள்ளது வெளிப்படையான ஒன்று. இந்த தனியார் பயிற்சி மையங்களில் கட்டணம் அதிகம் என்பதால் மாநிலங்களிலுள்ள பல மாணவர்களால் பயிற்சி பெற முடியாது. 2020ம் ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்களின் எண்ணிக்கையில் 17 சதவீதம் குறைந்து இருப்பது இந்தப் பிரச்னையை எடுத்துக்காட்டுகிறது. இந்தச் சட்டத் திருத்தம் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் இன்னல்களையும் தடைகளையும் மட்டுமே ஏற்படுத்தியுள்ளது. அவசரச் சட்டத்தின் மூலமாக உரியத் திருத்தங்கள் கொண்டு வந்து நீட் தேர்வை ரத்து செய்வதோடு மாநிலங்கள் தங்கள் விருப்பப்படி தேர்வு செயல் முறையை வைத்துக் கொள்வதற்கான உரிமையை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

மேலே சுட்டிக்காட்டிய பிரச்சினைகளின் அடிப்படையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரிமிலேயர் பிரிவினரைக் கணக்கிடுவதற்கான ஒரு கூறாகச் சம்பளத்தைச் சேர்ப்பது குறித்த முடிவைத் திரும்பப் பெறுதல், மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்தல், மருத்துவ படிப்புகள் இளங்கலை முதுகலை மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கான நீட்  தேர்வினை  ரத்து செய்தல் ஆகியவற்றைச் செய்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரிமிலேயர் பிரிவினரைக் கணக்கிடுவதற்கான ஒரு கூறாகச் சம்பளத்தைச் சேர்ப்பது குறித்த முடிவைத் திரும்பப் பெற வேண்டும்.

* அமைச்சர் தங்கமணியிடம் நலம் விசாரிப்பு
திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்,  தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
கொரோனா வைரஸ் தொற்றினால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மின்துறை அமைச்சர் தங்கமணியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் விரைவில் முழுநலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தேன். பொதுப்பணிகளில் இருப்பவர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்! இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Cancellation ,MK Stalin ,India , Medical Study, All India Appropriation, NEET Admission, Cancellation, PM Modi, Letter from MK Stalin
× RELATED இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு...