தூங்காநகர ஓட்டலில் ‘ருசிகர’ விழிப்புணர்வு மதுரையை கலக்கும் ‘மாஸ்க் புரோட்டா’: கொரோனா வைரஸ் வடிவ தோசை போண்டாவுக்கு செம டிமாண்ட்

மதுரை: மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எகிறி வரும் நிலையில், உணவகம் ஒன்று முகக்கவசம் (மாஸ்க்) வடிவில் புரோட்டா தயாரித்து விற்பனை செய்து, கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் வடிவில் ரவா தோசை, போண்டாவும் விற்கப்படுகிறது. மதுரையின் மகத்தான அடையாளங்களில் ஒன்றாக புரோட்டா இருக்கிறது. தூங்கா நகர் பெருமைக்குரிய மதுரையில் நள்ளிரவிலும் குடல் குழம்புடன், புரோட்டா ருசிக்கலாம். காலையிலும் கூட கமகமக்கும் குருமாவுடன், சுடச்சுட இங்குதான் புரோட்டா சாப்பிட முடியும். சைவம், அசைவமென எவரும் ஏற்கும் மதுரையின் புரோட்டா வாசம் அத்தனை தரப்பினருக்கும் ஈர்ப்புடையதாக இருக்கிறது.

தற்போது, தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து மதுரையில்தான் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்து வருகிறது. மக்களிடம் சமூக விலகலை கடைபிடிப்பது, சோப்பு போட்டு கைகளை கழுவுவது வரிசையில், முகக்கவசம் அணிவது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் என்ற பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளன. இச்சூழலில் வணிகத்தில் எதையும் வித்தியாசமாக எதிர்நோக்கும் மதுரை நகரம், தற்போது புரோட்டா மூலமும் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வகையில் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள பிரபல தனியார் உணவகம், வித்தியாச முயற்சியாக கொரோனாவுடன் தொடர்புபடுத்தி ‘மாஸ்க் புரோட்டா’ உள்ளிட்ட உணவுகளை தயாரித்து விற்று வருகிறது.

இதுகுறித்து உணவக உரிமையாளர் குமார் கூறியதாவது:

மதுரையில் பெருகும் கொரோனாவை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த மாஸ்க் புரோட்டாவை அறிமுகப்படுத்தினோம். நகருக்குள் பலர் முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரிவதை பார்க்கிறோம். எனவே, இந்த புரோட்டா முயற்சி சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பை தந்து, டிரெண்டிங் ஆகியிருக்கிறது. குழந்தைகள், பெரியவர்கள் விரும்பி வாங்கிச் சாப்பிடுகின்றனர். ஒரு செட் மாஸ்க் புரோட்டா ரூ.50 விலையில் பார்சலாக தருகிறோம். முகக்கவச புரோட்டாவுடன் செல்பி எடுத்துக் கொள்வதையும் சமூக வலைத்தளங்களில் பார்க்கிறோம் என்றார்.

Related Stories: