குடியிருப்பு, வணிக நிறுவனங்கள் க்ளீனா இல்லன்னா 6 மாசம் ஜெயில்...

சென்னை: கொரோனா பரவலைத் தடுக்க தமிழ்நாடு பொது சுகாதாரத் சட்டத்தின் கீழ் பல்வேறு புதிய விதிமுறைகளை அமல்படுத்த பொது சுகாதார திட்ட இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி கைகழுவுதல், மாஸ்க் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல், வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பை சுத்தமாக வைத்திருத்தல் உள்ளிட்ட செயல்பாடுகளை கட்டாயமாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இவற்றை பின்பற்றாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன்படி இந்த விதிகளை பின்பற்றாதவர்கள் மீது 11 பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிவு 59ன் படி கொரோனா தொற்று பரவாமல் தடுத்தல், பிரிவு 60ன் படி கொரோனா பாதிக்கப்பட்டவர்களை பணிக்கு அமர்த்தாமல் இருத்தல், பிரிவு 62ன் படி நோய்களை கண்டறிதல், பிரிவு 65ன் படி சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு பணியை மேற்கொள்ள அதிகாரம் வழங்குதல், பிரிவு 68ன் படி கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் துணிகளை சலவைக்கு போடுவதை தடை செய்தல், பிரிவு 69ன் படி கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் பொது போக்குவரத்தில் பயணம் செய்வதை தடை செய்தல், பிரிவு 72ன் படி கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைத்து பணிகளையும் தடை செய்தல், பிரிவு 73ன் படி கொரோனா பாதிக்கப்பட்டவர்களை நூலகங்களில் அனுமதிக்க தடை விதித்தல்,

பிரிவு 76ன் படி கொரோனா கட்டுப்பாட்டு பணியில் இருக்கும் அதிகாரிகளுக்கு சிறப்பு அதிகாரம் வழங்குதல், பிரிவு 81ன் படி புதிய விதிகளை உருவாக்குதல், பிரிவு 129ன் படி விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை அனைத்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் மற்றும் அதிகாரிகள் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இவற்றை அமல்படுத்தியது தொடர்பாக இரண்டு வாரத்திற்கு ஒரு முறை அறிக்கை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் எத்தனை பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.எத்தனை கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்ட்டது. எத்தனை பேர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டது என்பது தொடர்பாக தகவல் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று அனைத்து இயக்குநர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: