சாலைகளில் திரியும் மாடுகளால் விபத்துகள் அதிகரிப்பு: நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியிலிருந்து திருத்தணி, திருப்பதி செல்லும் நெடுஞ்சாலையில், ஜெ.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை பகுதிகளில் விபத்துகளை தடுக்கும் விதமாக சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் அதிக வேகத்தில் சென்று வருகின்றன. இச்சாலையில், திருவள்ளூர் நகரில் வசிக்கும் சிலர் தங்கள் ஆடு, மாடுகளை அவிழ்த்து விடுகின்றனர். அதிவேகமாக வாகனங்கள் சென்று வரும் நிலையில், எதிர்பாராத விதமாக திடீரென சாலையில் குறுக்கே மாடுகள் வந்துவிடுகின்றன. இதனால் திக்கு முக்காடும் வாகன ஓட்டிகள், தங்கள் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் பல நேரங்களில் விபத்தினை சந்திக்க நேரிடுகிறது. இதனால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதேபோல், திருவள்ளூர் - திருத்தணி நெடுஞ்சாலையில் பட்டறை பெரும்புதூர், பாண்டூர் ஆகிய பகுதிகளிலும் மாடுகள் சுதந்திரமாக திரிகின்றன.

திருவள்ளூர் - பேரம்பாக்கம் சாலையில், திருப்பாச்சூர், அகரம் ஆகிய பகுதிகளிலும், பேரம்பாக்கம் - பூந்தமல்லி சாலையில் மப்பேடு பகுதியிலும் கால்நடைகள் திரிகின்றன. இரவு நேரங்களில் சாலையிலேயே படுத்து உறங்குகிறது. இதனால், தினமும் ஏராளமான விபத்துகள் இம்மாவட்டத்தில் நடந்துவருகிறது. எனவே, விபத்துகளை தவிர்க்க, நகரில் திரியும் மாடுகளை திருவள்ளூர் நகராட்சி அதிகாரிகளும், கிராம பகுதிகளில் திரியும் மாடுகளை போலீசார் மற்றும் வருவாய் துறையினரும் பிடித்து, அதன் உரிமையாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* உரிமையாளரிடம் அபராதம் வசூலிக்க வேண்டும்

திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், ஏராளமான மாடுகள் சுற்றித்திரியும் நிலையில், அவற்றை அடைப்பதற்காக மாவட்டத்தில் ஆங்காங்கே கால்நடைப் பட்டிகள் உள்ளன. விளைநிலத்தில் நுழைந்து சேதப்படுத்தும் மாடுகள், அரசுக்கு சொந்தமான தோட்டங்களை சேதம் விளைவிக்கும் கால்நடைகளை பிடித்து பட்டியில் அடைக்கலாம். மாட்டின் உரிமையாளர் வந்து கேட்கும்போது, அவரிடமிருந்து அபராதத் தொகை மற்றும் தீனிச் செலவை வசூலித்துக் கொண்டு, கால்நடைகளை விடுவிக்க வேண்டும்.

Related Stories: