காவல்துறை அதிகாரிகள் கூட்டம் போலீசாருக்கு ஈகோ, ஆணவம் கூடாது: செங்கை எஸ்பி அறிவுறுத்தல்

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் நடந்த காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில் போலீசாருக்கு ஈகோ, ஆணவம் கூடாது. பொதுமக்கள், வியாபாரிகளிடம் கனிவாக நடந்துக்கொள்ள வேண்டும் என எஸ்பி கண்ணன் கூறினார். மதுராந்தகம் உட்கோட்டத்துக்கு உட்பட்ட காவல்துறை அதிகாரிகள் கூட்டம் நடந்தது. அதில் எஸ்பி கண்ணன் கலந்து கொண்டு, போலீசார், பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரைகள் வழங்கினார். அப்போது, அவர் பேசியதாவது, போலீசாருக்கு ஈகோ, ஆணவம் கூடாது. போலீசார் வானத்தில் இருந்து குதிக்கவில்லை. நாம் மக்களின் காவலர்கள். பொதுமக்கள் இந்த இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ, ஏட்டு மிகவும் நல்லவர்கள் என கூற வேண்டும். பொதுமக்களிடம் உங்களின் நடவடிக்கையை மாற்றி கொள்ள வேண்டும்.

நீங்கள் வாகன தணிக்கையில் ஈடுபடும்போது, பொதுமக்களிடம் கனிவாக பேசுங்கள். நீங்கள் பிடிக்கும் வண்டி, உங்களுக்கு 100வது வண்டியாக இருக்கும். ஆனால், அவர்களுக்கு அது ஒரே வண்டி.  எனவே, அவர்களிடம் தற்போதைய சூழ்நிலையை விளக்கி கூறினால், அவர் புரிந்து கொள்வார். மீண்டும் தவறு செய்ய மாட்டார்கள். இதேபோன்று, கடைகளிலோ அல்லது பெரிய வணிக நிறுவனங்களிலோ, கண்டிப்பாக சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என அன்போடு அறிவுறுத்துங்கள். அதே நேரத்தில், நீங்களும் மிக கவனமாக இருக்க வேண்டும். உங்களின் உடல்நிலையை பார்த்து கொள்ளுங்கள். நீங்கள், உங்கள் குடும்பத்திற்கு மிக மிக முக்கியம்.

உங்கள் குடும்பத்தினரையும் நல்ல சத்தான உணவுகளை சாப்பிட சொல்லி, அவர்களும் தங்களை தாங்களே தற்காத்து கொள்ள செய்யுங்கள். உங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்’ என்றார். கூட்டத்தில் மதுராந்தகம் டிஎஸ்பி மகேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் மதுராந்தகம் ருக்மாங்கதன், அச்சிறுப்பாக்கம் சரவணன், மதுராந்தகம் டிராபிக் ஆனந்தராஜ் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். அப்போது, அவர்களுக்கு உடல் வெப்பம் பரிசோதனை செய்து, கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

* வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல்

செங்கல்பட்டில் ஆட்டோ, காய்கறி, வியாபாரி சங்கத்தினருடன் எஸ்பி ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், அரசு ஒருசில தளர்வுகளோடு காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை வியாபாரம் செய்ய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கடைகளில் கிருமிநாசினி தெளித்து சுகாதாரமாக இருக்க வேண்டும். முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்களுக்கு பொருட்கள் வழங்க வேண்டாம். உங்களுக்கு போலீசார் தொல்லை கொடுத்தால், என்னை எந்த நேரத்திலும் தொடர்பு கொண்டு, உங்கள் குறையை சொல்லலாம். உங்கள் குறையை, நான் தீர்த்து வைக்கிறேன். அரசு உத்தரவை மீறாமல் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். அப்போதுதான் கொரோனா என்ற கொடிய நோயை எதிர்கொள்ள முடியும் என்றார்.

Related Stories: