ஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்பு மாயமான வாலிபர் சரமாரி வெட்டி கொலை: அழுகிய நிலையில் சடலம் மீட்பு

ஸ்ரீபெரும்புதூர்: கடந்த 10 நாட்களுக்கு முன் காணாமல் போன வாலிபரை, போலீசார் அழுகிய நிலையில் சடலமாக மீட்டனர். சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இதுதொடர்பாக 10க்கு மேற்பட்டோரிடம் தீவிரமாக விசாரிக்கின்றனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஜான்ரோஸ் (23). கஞ்சா மற்றும் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். கடந்த 26ம் தேதி ஜான்ரோஸ், வீட்டில் இருந்து, அவரது நண்பர் கார்த்திக் உள்பட 2 பேருடன் வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள், அவரை பல இடங்களில் தேடினர். ஆனால், ஜான்ரோஸ் குறித்து எந்த தகவலும் இல்லை.

அடுத்த நாள், கார்த்திக் வீட்டுக்கு சென்றனர். அவர் வீட்டில் இருந்தார். அவரிடம் ஜான் ரோஸ் குறித்து கேட்டபோது, 3 பேரும் போந்தூர் பகுதியில் கஞ்சா குடிக்க சென்றனர். அப்போது, அங்கிருந்த ஒரு கும்பலுடன் தகராறு ஏற்பட்டது.

அந்த கும்பல், கத்தி மற்றும் அவரிவாளுடன் விரட்டியதில், 3 பேரும் வெவ்வேறு திசையில் தப்பிவிட்டோம் என கூறியுள்ளார். இதைகேட்ட பெற்றோர், ஜான் ரோஸ் தகராறில் ஈடுபட்டதால், தலைமறைவாகிவிட்டார் என நினைத்தனர்.

பின்னர், ஸ்ரீபெரும்புதூர் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான வாலிபரை தேடி வந்தனர்.

இதற்கிடையில், சம்பவத்தன்று ஜான்ரோஸ், கார்த்திக் ஆகியோருடன் சென்ற வாலிபரை, போந்தூர் பகுதி மக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர் என கூறப்படுகிறது.

இந்நிலையில், போந்தூர் பகுதியில் சாலையோர முட்புதரில் ஒரு வாலிபர் அழுகிய நிலையில் கிடந்தது. அவ்வழியாக சென்ற பொதுமக்கள், அதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அதில், உடல் அழுகிய நிலையிலும், பல இடங்களில் வெட்டு காயங்களும் இருந்தன. இதையடுத்து சடலத்தை கைப்பற்றி ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், காணாமல் போன ஜான் ரோஸ் என தெரிந்தது.

தொடர்ந்து போலீசார், கார்த்திக் உள்பட 10க்கு மேற்பட்டோரை பிடித்து காவல் நிலையத்தில் வைத்து தீவிரமாக விசாரிக்கின்றனர். முதல்கட்ட விசாரணையில், ஜான்ரோஸ் மற்றும் கார்த்திக் ஆகியோர் எந்நேரமும் கத்தியுடன் இருப்பது வழக்கம். அதுபோல் சம்பவத்தன்று, போந்தூர் பகுதியில் உள்ள நண்பரை கத்தியுடன் தேடினர். இதை பார்த்த சிலர், அவர்களை சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்தனர். இதில் காரத்திக் தப்பிவிட்டார். ஜான்ரோஸ், வெட்டுப்பட்டு இறந்துள்ளார். இதையடுத்து சடலத்தை, முட்புதரில் வீசி சென்னறர் என தெரிந்தது. மேலும், கஞ்சா போதை தகராறில் ஜான்ரோஸ் மற்றும் அவர்களது நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கொல்லப்பட்டாரா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிரமாக போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: