மழையால் காஞ்சிபுரம் வையாவூர் சாலையில் சேறும் சகதியுமான காய்கறி சந்தை

காஞ்சிபுரம்: கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, காஞ்சிபுரம் ரயில்வே ரோடு பகுதியில் செயல்பட்ட ராஜாஜி காய்கறி சந்தை மூடப்பட்டது. இதையடுத்து, காஞ்சிபுரம் ரயில் நிலையம் அருகே வையாவூர் சாலையில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், காய்கறிச் சந்தை முழுவதும் மழைநீர் தேங்கி வியாபாரிகள் கடை வைக்க முடியாமல் அவதிப்பட்டனர். அனைத்து வியாபாரிகளும் மழை நீர் இல்லாத பகுதியில் அருகருகே கடை வைத்து, சேறும் சகதியுமான இடத்தில் வியாபாரம் செய்தனர். இதனால் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வாங்க வந்த சிறு வியாபாரிகள் அவதியடைந்தனர்.

கொரோனா பாதிப்பை தடுக்க சமூக இடைவெளி, தனிநபர் இடைவெளி அவசியம் என அரசு அறிவுறுத்தி வரும் வேளையில், எவ்வித சமூக இடைவெளியும் பின்பற்றாமல் சிறுவியாபாரிகள் காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருள்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதைதொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் நகராட்சி அதிகாரிகள் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். வையாவூர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி சந்தையில் அடிக்கடி மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறுவதால், இதற்கு மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்துகின்றனர்.

* 2 மணிநேரம் கனமழை

காஞ்சிபுரத்தில்  கடந்த 2 வாரங்களாக வெயில், மேகமூட்டம், லேசான மழை என மாறிமாறி இருந்தது. இதையொட்டி, காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. ஆடிப்பட்டம் தொடங்க உள்ள நிலையில் பலத்த மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். வெப்பச்சலனம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய வடமாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்தது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில், நேற்று முன்தினம் இரவு சுமார் 9.30 மணியளவில், திடீரென பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது. இரவு 11.30 மணிவரை கொட்டித் தீர்த்த மழையால், சாலையில் மழைநீர் ஆறாக ஓடியது. இதேபோல் பாலுசெட்டிசத்திரம், விஷார், பெரும்பாக்கம், முசரவாக்கம், அய்யங்கார்குளம், ஓரிக்கை, செவிலிமேடு, உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்த இந்த  மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து இதேபோல் மழை பெய்தால், ஏரி குளங்கள் நிரம்பி, நிலத்தடி நீர் சேமிக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Related Stories: