கொரோனா மருந்து கண்டுபிடிக்காவிட்டால் இந்தியாவில் 2021ல் ஒரே நாளில் 2.87 லட்சம் பேர் பாதிக்கப்படுவர்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்காவிட்டால், 2021ம் ஆண்டு இந்தியாவில் ஒரே நாளில் 2.87 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஆனாலும், பலகட்ட பரிசோதனைகள் செய்ய வேண்டியிருப்பதால், அடுத்த ஆண்டுதான் தடுப்பு மருந்து தயாராக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை அடுத்த ஆண்டும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கபடாவிட்டால் உலகின் கதி என்னவாகும் என்பது குறித்து அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஆய்வு நடத்தி உள்ளது.

84 நாடுகளின் தகவல்கள் மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் பல்வேறு அதிர்ச்சிகர முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, அடுத்த ஆண்டு கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாவிட்டால், 2021 குளிர்கால இறுதியில் இந்தியாவில் ஒரே நாளில் 2.87 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் உலக அளவில் பாதிப்பானது 24.9 கோடியை எட்டியிருக்கும் என்றும், 18 லட்சம் பேர் பலியாவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவு கொரோனா மருந்து கண்டுபிடிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக உள்ளது.

* உலக அளவில் தற்போது 1.18 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், சுமார் 5.5 லட்சம் பேர் பலியாகி உள்ளனர்.

* உலக அளவில் தினசரி 5.5 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். 5,500 பேர் பலியாகின்றனர்.

* இந்தியாவில் தற்போது ஒருநாளில் 20,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர்.

* இந்தியாவில் 1 லட்சம் பாதிப்பு இலக்கு எட்ட 110 நாட்கள் ஆன நிலையில், அடுத்த 49 நாளில் 6 லட்சமானது. அடுத்த 5 நாளில் 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.

Related Stories: