தொடர்ந்து 6வது நாளாக 20 ஆயிரம் பேர் பாதிப்பு: 61.53% பேர் குணமடைந்தனர்

புதுடெல்லி: நாட்டில் கொரோனா பாதித்து குணமடைந்தோர் சதவீதம் 61.53 ஆக உயர்ந்துள்ள போதிலும்,  பாதிப்பு எண்ணிக்கையில் தொடர்ந்து 6வது நாளாக 20 ஆயிரத்தை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில்,  22,752 பேர் பாதித்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 482 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக, மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டின் கொரோனா பாதிப்பில், நேற்று ஒரே நாளில் 22,752 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இதுவரை பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 7,42,417 ஆக உயர்ந்துள்ளது. அதே போல,  கடந்த 24 மணி நேரத்தில் 482 பேர் பலியானதைத் தொடர்ந்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,642 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை வைரசால் பாதிக்கப்பட்டு 2,64,944 பேர் சிகிச்சை பெறுகின்றனர். அதே நேரம் 4,56,830 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோரின் சதவீதம் 61.53 ஆக அதிகரித்துள்ளது. இதில் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 224, தமிழ்நாட்டில் 65, டெல்லியில் 50, மேற்கு வங்கத்தில் 25, உத்தர பிரதேசத்தில் 18, குஜராத்தில் 17, கர்நாடகாவில் 15, ஆந்திராவில் 13, ராஜஸ்தானில் 11, பீகார், தெலங்கானாவில் தலா 7, பஞ்சாபில் 6, ஜம்மு காஷ்மீர், மத்திய பிரதேசத்தில் தலா 5, ஒடிசாவில் 4, அரியானாவில் 3, ஜார்கண்ட், புதுச்சேரியில் தலா 2, சட்டீஸ்கர், கோவா, உத்தரகாண்டில் தலா ஒருவரும் இறந்துள்ளனர். நேற்றைய நிலவரப்படி நாடு முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 20,642 ஆக உள்ளது. பாதிப்பு எண்ணிக்கையில் மகாராஷ்டிரா 2,17,121 பேருடன் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு 1,18,594 பேருடன் 2வது இடத்திலும், 1,02,831 பேருடன் டெல்லி 3வது இடத்திலும் உள்ளது. நேற்றைய நிலவரப்படி, மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 7,42,417 ஆக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* ஒரே நாளில் 2.5 லட்சம் பரிசோதனை

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 62 ஆயிரத்து 679 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இத்துடன் சேர்த்து, நாடு முழுவதிலும் 1 கோடியே 4 லட்சத்து 73 ஆயிரத்து 771 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

Related Stories: