பிஎப் சலுகை 3 மாதம் நீட்டிப்பு நவம்பர் வரை இலவச ரேஷன் மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: வருங்கால வைப்பு நிதி திட்டத்தின்கீழ் ஊழியர்கள், நிறுவனங்கள் செலுத்த வேண்டிய 24% தொகையை அரசே செலுத்தும் திட்டம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யவும், இலவச ரேஷன் பொருட்கள் திட்டத்தை நவம்பர் வரை நீட்டிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அவர் கூறியதாவது: கொரோனா பாதிப்பால் நவம்பர் வரை ரேசனில் இலவச உணவுப் பொருட்கள் வழங்க வகை செய்யும் பிரதான் மந்திரி கரீப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், 81 கோடி ஏழை மக்கள் பயனடைவர்கள். இத்திட்டத்தின் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.1.49 லட்சம் கோடி செலவாகும்.

ஊரடங்கு அமலில் இருப்பதால் மேலும் 3 மாதங்களுக்கு 24% பிஎப் தொகையை மத்திய அரசே செலுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 72.22 லட்சம் நிறுவனங்களும், 3.67 லட்சம் ஊழியர்களும் பயனடைவர். மத்திய அரசுக்கு ரூ.4,860 கோடி செலவாகும். இத்திட்டத்தின் படி, நிறுவனத்தில், 90% ஊழியர்களின் மாத ஊதியம் ரூ.15,000 க்கும் குறைவாக இருக்க வேண்டும். 100 ஊழியர்கள் வரை பணியாற்ற வேண்டும்.பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களான  யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் நிதிநிலையை உயர்த்த ரூ.12,450 கோடி மூலதன முதலீடாக அளிக்கப்படும். புலம்பெயர் தொழிலாளர்கள், ஏழைகளுக்காக 107 நகரங்களில் 1 லட்சத்து 8,000 குறைந்த வாடகை அடுக்குமாடி வீடுகள் கட்டப்படும்..  உஜ்வாலா திட்டத்தின் கீழ் 8 கோடி ஏழைப் பெண்களுக்கு 3 இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டத்தை மேலும் 3 மாதத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்அளித்துள்ளது. இதன்படி செப்டம்பர் மாதம் வரை மேலும் 3 எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: