சாத்தான்குளம் சம்பவம் எதிரொலி போலீஸ் காவலில் இறப்புகளை தடுக்க வழிகாட்டுதல் கோரி மனு: உச்ச நீதிமன்றம் விரைவில் விசாரணை

புதுடெல்லி: சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை தொடர்பாக போலீஸ் காவலில் இறப்புகளை தடுக்க வழிகாட்டுதல்களை வகுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய தந்தை, மகன் இருவரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசார், காவல் நிலையத்தில் அடித்து சித்ரவதை செய்து கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், சாத்தான்குளம் சம்பவத்தின் எதிரொலியாக உச்ச நீதிமன்றத்தில் தனியார் தொண்டு நிறுவனம் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் கூறயிருப்பதாவது:

போலீஸ் காவலில் நடக்கும் மரணங்களை சாத்தான்குளம் சம்பவம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. சட்டத்தின் ஆட்சி மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தை மதிக்கும் அனைவரையும் இது அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. போலீஸ் துஷ்பிரயோகத்திற்கு எதிராக சட்ட பாதுகாப்பு திறம்பட நிலைநிறுத்தத் தவறியிருக்கிறது. மேலும், போலீஸ் துறையில் நிர்வாக ரீதியாக திருத்தங்கள் மேற்கொள்ளவும், ஒரு வலுவான சட்டத்தை இயற்ற வேண்டியதன் அவசியத்தையும் இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கைப்படி, கடந்த ஆண்டு நீதித்துறை காவலில்  1,636 மரணங்களும், போலீஸ் காவலில் 148 மரணங்களும் நிகழ்ந்துள்ளன. எனவே, போலீஸ் காவலில் மரணங்கள், சித்ரவதைகள், கற்பழிப்பு அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்த உச்ச நீதிமன்றத்தால் கண்காணிக்கப்படும் தனிக்குழுவை அமைக்க வேண்டும். அதில், அனைத்து துறை, அமைச்சக உறுப்பினர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் வகுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: