ஊரடங்கு தளர்வைத் தொடர்ந்து இருசக்கர வாகன விற்பனை சூடுபிடித்தது

புதுடெல்லி: கொரோனா தொற்று ஊரடங்கு நடவடிக்கைகளால் இரண்டு மாதங்கள் விற்பனையின்றி இருந்த நிலையில் கடந்த மாதம் இருசக்கர வாகன விற்பனை சூடு பிடிக்க தொடங்கியது. கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் இறுதியில் இருந்து தொடர்ந்து இரண்டு மாதங்கள் ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. ஜூன் மாதத்தில் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நோய் பாதிப்பு இல்லாத இடங்களில் வணிக நடவடிக்கைகள் தொடங்கின. இந்நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் இருசக்கர வாகன விற்பனைகணிசமாக இருந்ததாக சில நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பொது போக்குவரத்தை காட்டிலும் தனிப்பட்ட வாகனத்துக்கான ஆர்வம் மற்றும் தேவை காரணமாக அதிகமானோர் இருசக்கர வாகனங்களை வாங்குதில் கவனம் செலுத்தினார்கள். எனினும் ஏப்ரல், மே மாதங்களில் மிக குறைந்த விற்பனை காணப்பட்டது இது ஜூன் மாதத்தில் கணிசமாக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தத்தில் ஜூனில் பிரதான நிறுவனங்களின் விற்பனையானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 27-35 சதவீதம் குறைந்து காணப்பட்டது. ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனமானது. கடந்த மே மாதம் 1,12,682 யூனிட்கள் விற்பனை செய்துள்ள நிலையில் ஜூன் மாதத்தில் இதனை போல் 4 மடங்கு மொத்த விநியோகம் செய்துள்ளது. 4,50,744க்கும் மேற்பட்ட யூனிட்டுக்களை ஜூன் மாதத்தில் விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 26.86 சதவீதம் குறைவாகும். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 6,16,256 யூனிட்டுக்கள் விற்பனை செய்துள்ளது.

டிவிஎஸ் நிறுவனமானது கடந்த மாதம் 1,91,076 யூனிட்களை விற்பனையை பதிவு செய்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு 2,83,461ஆக இருந்தது. இது 32.6சதவீத சரிவாகும். டிவிஎஸ் மோட்டார்ஸ் உள்நாட்டு இருசக்கர விற்பனை ஜூன் மாதத்தில் 1.44,817 யூனிட்கள் ஆகும். இதுவே கடந்த ஆண்டு 2,29,279ஆக இருந்தது. 36சதவீதம் சரிந்துள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 1,99,340 ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டு 1,46,695ஆக குறைந்துள்ளது. இது 26சதவீத சரிவாகும். ஒட்டுமொத்தமாக இருசக்கர வாகன விற்பனையானது ஜூன் மாதத்தில் 2,55,122ஆகும். இது கடந்த ஆண்டு 3,51,291 யூனிட்டாக இருந்தது. ராயல் என்பீல்ட் நிறுவனம் 38,065 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்த இருசக்கர வாகன விற்பனை 58,339ஆக இருந்தது. இந்த நிறுவனம் 36 சதவீத சரிவை சந்தித்துள்ளது.

Related Stories: