முதல்வர் எடப்பாடியுடன் மத்திய மின்துறை அமைச்சர் திடீர் சந்திப்பு இலவச மின்சாரம் ரத்தாகிறதா? மத்திய அரசின் மின்சார திருத்த சட்டத்துக்கு ஆதரவு கேட்டதால் பரபரப்பு

சென்னை: மத்திய அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ள மின்சார திருத்தச் சட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய மின்சாரத்துறை அமைச்சர் நேற்று டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வந்து முதல்வர் எடப்பாடியை சந்தித்து கோரிக்கை வைத்தார். இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்தாவதுடன், வீடுகளுக்கான மின் கட்டணமும் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு, `மின்சார திருத்த சட்டம் 2020’ என்ற புதிய திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறது. இதன் வரைவு சட்டத்தை கடந்த ஏப்ரல் 17ம் தேதி இணையதளத்தில் வெளியிட்டு பொதுமக்களிடம் கருத்து கேட்டுள்ளது. இந்த திருத்த சட்டத்துக்கு, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தமிழகத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டால் ஏழைகளும், விவசாயிகளுக்கும் தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை மத்திய அரசு ரத்து செய்துவிடும் என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

தமிழகத்தில் விவசாயிகளுக்கு இப்போது நேரடியாக இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. அதற்காக அவர்கள் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. மத்திய அரசின் புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம், குடிசைகள் மற்றும் பசுமை வீடுகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம், வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம், நெசவாளர் உள்ளிட்ட சில தொழில் பிரிவினருக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் ஆகியவை ரத்து செய்யப்படும். ஒருவேளை இந்த பிரிவினருக்கு உதவ வேண்டும் என்று மாநில அரசு நினைத்தால், மின்சாரத்திற்கான மானியத்தை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தலாம் என்று மின்சார திருத்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் வீடுகளுக்கான மின் கட்டணமும் கடுமையாக உயரும் ஆபத்தும் உள்ளது. இதற்கு முன்பு 2014, 2018, 2019 ஆகிய ஆண்டுகளிலும் இந்த சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக முயன்றது. அப்போதும் எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் கடுமையாக எதிர்த்ததால் இந்த சட்டத்திருத்தம் கைவிடப்பட்டது.

அரசியலமைப்பு சட்டத்தின்படி எரிசக்தி துறை பொதுப்பட்டியலில் உள்ளது. அவ்வாறு இருக்கும்போது மாநில அரசுகளுக்கு உள்ள அதிகாரங்களை மத்திய அரசு ஒட்டுமொத்தமாக பறித்துக் கொள்வது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது ஆகும் என்று தமிழகத்தில் திமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பாமக உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதிமுகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவே கூறப்படுகிறது. ஆனாலும், பகிரங்கமாக தனது நிலைப்பாட்டை முதல்வர் எடப்பாடி இன்னும் அறிவிக்கவில்லை. இந்த பரபரப்பான சூழ்நிலையில், மத்திய எரிசக்தி துறை இணை அமைச்சர் ஆர்.கே.சிங் நேற்று பகல் 11.15 மணிக்கு தனி விமானத்தில் டெல்லியில் இருந்து சென்னை வந்தார். பின்னர், அங்கிருந்து நேராக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை சென்று ஓய்வு எடுத்துவிட்டு, மதியம் 12.15 மணிக்கு தலைமை செயலகம் சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. அப்போது தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் மின்சார துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பின்போது, மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள மின்சார சட்டத்திருத்த மசோதா 2020 திட்டத்தை தமிழக அரசு ஆதரிக்க வேண்டும் என்று நேரடியாக கோரிக்கை வைத்ததாகவும், இதை வலியுறுத்துவதற்காகவே அவர் சிறப்பு பயணமாக நேற்று திடீரென புறப்பட்டு தமிழகம் வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி விட்டு, மத்திய எரிசக்தி துறை அமைச்சர், அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார். பின்னர் நேற்று மாலை 4.30 மணிக்கு தனி விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.

மத்திய அரசின் இந்த மசோதாவுக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்குமா, எதிர்ப்பு தெரிவிக்குமா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. அதேநேரம், தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி ஒரு கடிதத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சரிடம் வழங்கியுள்ளார். மத்திய சட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவு தெரிவித்தால், ஏற்கனவே  விவசாயத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள், முழுமையாக விவசாயத்தை நிறுத்த  வேண்டிய சூழ்நிலை ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

Related Stories: