கொரோனா காற்றின் மூலம் பரவும்....! 200க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் அளித்த ஆதாரங்களுக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்

ஜெனிவா: கொரோனா வைரஸ் காற்றில் பரவுவதற்கான ஆதாரங்கள் இருப்பதாக 200க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் கூறிய நிலையில், அதனை ஆய்வாளர்கள் அளித்த ஆதாரங்களை ஏற்கிறோம் என உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் மனிதர்கள் மூலம் மனிதர்களுக்கு பரவும். ஒருவர் தும்மும்போதும், இருமும்போதும் அதிலிருந்து வெளிவரும் நீர்த்துளிகள் மூலம் பரவும். பாதிக்கப்பட்டவர்கள் தொடும் பொருட்களை மற்றொருவர் தொட்டு முகத்தில் தேய்க்கும்போது வைரஸ் பரவும் என உலக சுகாதார அமைப்பு முன்பு அறிவுறுத்தியது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவும் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக உலக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். ஒருவர் தும்மியப்பின், இருமியப்பின் அவரின் எச்சலின் சிறிய நுண்துகள்கள் காற்றில் பரவி இருந்தால், அதை மற்றொருவர் சுவாசிக்கும் போது, அவரும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, கொரோனா வைரஸ் காற்றில் பரவும் என அறிவிக்க வேண்டும் என்று 32 நாடுகளைச் சேர்ந்த 239 அறிவியல் வல்லுநர்கள், ஆய்வாளர்கள் உலக சுகாதார அமைப்புக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தியும், ஆய்வறிக்கையைக் குறிப்பிட்டும் பரிந்துரையை மாற்றக் கோரினர். இதனை ஆய்வு செய்துவருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.

ஜெனிவாவில் உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதன்பின்னர், கொரோனா வைரஸ் தடுப்பின் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறியதாவது: கொரோனா வைரஸ் மனிதர்கள் மூலம் மனிதர்களுக்கு ஒருவர் தும்மும்போதும், இருமும்போதும் வெளிப்படும் நீர்த்துளிகள் மூலம் பரவும் என்று கூறியிருந்தோம். ஆனால், ஆய்வாளர்கள் காற்றின் மூலம் வைரஸ் பரவும் சாத்தியம் இருக்கிறது என ஆய்வறிக்கையை அளித்தனர். காற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதற்கான ஆதாரங்கள் இருப்பதை உலக சுகாதார அமைப்பு ஏற்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: