கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து கொள்ளை: மகாராஷ்டிரா நகைக்கடையில் துணிகரம்

மும்பை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே வருகின்றனர். ஒருவருக்கொருவர் சமூக இடைவெளியை பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுபவர்கள் பாதுகாப்பு உடை அணிந்து மற்றவர்களுக்கு சேவை செய்கின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தின் பால்டன் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில், கொள்ளை கும்பல் ஒன்று புகுந்தது. அவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு உடை அணிந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக நகைகள் கொள்ளை போயுள்ளதாக கடை உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து அங்கு இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், கொள்ளையர்கள் சிலர் முகக்கவசம், கையுறைகள், பாதுகாப்பு உடைகள் அணிந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதை கண்டறிந்தனர். மேலும், கொள்ளையர்கள் நகைக்கடையின் சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்துள்ளனர். கடையில் இருந்து சுமார் 780 கிராம் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை போலீசார் தேடிவருகின்றனர். கொரோனா பரவல் அச்சம் காரணமாக கொள்ளையர்கள் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளதால், அவர்களை கண்டுபிடிப்பது போலீசாருக்கு சவாலாக உள்ளது.

இதேபோன்ற சம்பவத்தில், மகாராஷ்டிராவின் ஜல்னாவின் கத்ராபாத் பகுதியில் உள்ள கொரோனா நோயாளியின் வீட்டிற்குள் அடையாளம் தெரியாத திருடர்கள் புகுந்து 72,000 ரூபாய் மதிப்புள்ள ஆபரணங்களை திருடிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: