×

கூடலூர் அருகே வாழைக்கன்றுகளை நாசம் செய்த காட்டுயானை: விவசாயிகள் அச்சம்

கூடலூர்: கூடலூர் அருகே, மலையடிவார தோட்டத்தில் வாழைக்கன்றுகளை காட்டு யானை நாசம் செய்ததால், அப்பகுதி விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். கூடலூர் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள விளைநிலங்களில் வாழை, தென்னை உள்ளிட்ட பல பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். விளைநிலங்கள் வனப்பகுதியை ஒட்டி இருப்பதால் மான், யானை, காட்டுப்பன்றி, குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி வந்து பயிர்களை நாசம் செய்கின்றன. இதனால், இரவு நேரங்களில் விவசாயிகள் காவல் காத்து சத்தமிட்டும், தகரங்களை தட்டியும் ஒலி எழுப்பி விலங்குகளை விரட்டி வருகின்றனர்.

விளைநிலங்களை ஒட்டிய வனப்பகுதியில் அகழிகள் வெட்டவும், சோலார் மின்வேலிகள் அமைக்கவும் விவசாயிகள் வலியுறுத்தியும், வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ஒருசில விவசாயிகள் தாங்களாகவே அகழிகள் மற்றும் சோலார் மின்வேலிகளை அமைத்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கூடலூர் அருகே உள்ள வெட்டுக்காடு கடமான்குளம் பகுதியில் உள்ள சதீஷ் என்ற விவசாயிக்கு சொந்தமான வாழை தோட்டத்திற்குள் புகுந்த காட்டுயானை 500க்கும் மேற்பட்ட வாழைக்கன்றுகளையும், 50க்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகளையும் சேதப்படுத்திவிட்டு அதிகாலையில் வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

இதனால், அப்பகுதியில் உள்ள மற்ற விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே, விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Cuddalore , Cuddalore, Banana, Nasam, Wildfire
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!