ஊரடங்கால் மூடிய மைதானங்கள், கிளப்புகள் விளையாட்டு வீரர்களின் எதிர்கால கனவுகளை சிதைக்கும் கொரோனா: பயிற்சியும் போச்சு... மகிழ்ச்சியும் போச்சு...

சேலம்: கொரோனா வைரஸ் ஊரடங்கால் மைதானங்கள்,கிளப்புகள் மூடிக்கிடக்கிறது. இது விளையாட்டு வீரர்களின் எதிர்கால கனவுகளை சிதைத்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் திருமண மண்டபங்கள், பெரிய வணிக வளாகங்கள், பூங்காங்கள்,நீச்சல் குளங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஜப்பானில் இந்த மாதம் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் முதல் சர்வதேச போட்டிகள், தேசிய, மாநில, மாவட்ட அளவிலான அனைத்து போட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், சமூக இடைவெளியை கடைபிடிக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அனைத்து வகையான விளையாட்டு பயிற்சி கூடங்களும் கடந்த 3 மாதங்களாக அடைக்கப்பட்டுள்ளது. இதனால் விளையாட்டு வீர்கள் பயிற்சி பெறுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விளையாட்டு பயிற்சியாளர்கள் கூறியதாவது: மாநில,தேசிய அளவில் மட்டுமின்றி,சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் நூற்றுக்கணக்கான வீரர், வீரங்கனைகள் நாடு முழுவதும் பயிற்சி பெற்று வருகின்றனர்.கொரோனா பரவல் காரணமாக விளையாட்டு  மைதானங்கள்,பயிற்சி நிலையங்கள் என்று அனைத்தும்  அடைக்கப்பட்டுள்ளது.

இதனால் மாணவ,மாணவிகள் பயிற்சி பெறாமல்,வீடுகளில் முடங்கியுள்ளனர்.அவர்களுக்கு தொடர்ச்சியாக,முறையான பயிற்சிகள் அளிக்கப்பட முடியாத சூழல் உருவாகியுள்ளது.இதனால் அவர்களின் நாட்டமும், உடல் திறனும் குறைவதற்கு வாய்ப்புள்ளது. மேலும்,விளையாட்டில் முக்கிய  ஒன்றான தொழில்நுட்ப அறிவும்,அவர்களுக்கு கிடைப்பதில் பின்னடைவு  ஏற்படுகிறது. விளையாட்டு தான் வாழ்க்கை என எடுத்துக்கொண்டு பயிற்சி பெறும் வீரர்,வீரங்கனைகள்,மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று,மாநில,தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.இதன் மூலம்,அவர்களின் விளையாட்டுத்திறனும் மேம்படுகிறது. அதோடு எதிர்கால கனவான அரசு வேலை கிடைக்கிறது.

தற்போது, ஊரடங்கால்,குறிப்பிட்ட வயதில் சாதிக்க காத்திருக்கும் வீரர்,வீரங்கனைகளுக்கு இதற்கு சாத்தியமில்லாமல் போகிறது. இதனால், விளையாட்டை வாழ்கையாக கொண்டிருக்கும், வீரர், வீரங்கனைகளின் கனவு ஒட்டுமொத்தமாக சிதைகிறது. மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் விளையாட்டு விடுதிகளில் சேர்ந்து பயிற்சி பெற மாவட்ட,மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் தேர்வு செய்யப்படும் வீரர், வீரங்கனைகள் இது போன்ற விளையாட்டு விடுதிகளில் பயிற்சி அளிக்கப்படும். தொடர்ந்து, அவர்களுக்கு கிடைக்கும் பயிற்சி மூலம், தேசிய, சர்வதேச போட்டிகள் வரை அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

தற்போது, ஊரடங்கால்,விடுதியில் இருக்க முடியாத சூழ்நிலையில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்னர். இதனால் அவர்களுக்கு முறையான பயிற்சி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், விடுதியில் கிடைக்ககூடிய சத்தான உணவுகள் கூட வீட்டில் கிடைப்பதில்லை. இதன் காரணமாக வீரர்களின் உடல்திறன் முற்றிலும் பாதிக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்.

தனியார் பயிற்சி நிலையங்களும் மூடல்

அதிகாரிகள் கூறுகையில்,‘‘வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக அரசு மட்டுமன்றி, தனியார் விளையாட்டு பயிற்சி நிலையங்களும் உள்ளது. ஊரடங்கால் அனைத்து பயிற்சி நிலையங்களும் மூடப்பட்டள்ளது. இதனால் அனைத்து விதமான விளையாட்டுகளுக்கும் பயிற்சி பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. தொடர்ச்சியாக பயிற்சி இருந்தால் மட்டுமே வீரர்களின் உடல்திறன் சீராக இருக்கும். வீடுகளில் முடங்கியுள்ளதால் அவர்கள் பயிற்சி பெறமுடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், வேலைவாய்ப்பை எதிர்நோக்கி விளையாட்டு துறையில் பயிற்சி பெற்று வந்தவர்களுக்கும்,எதிர்கால கனவை சிதைக்கக்கூடிய நிலையை கொரோனா ஏற்படுத்தி உள்ளது,’’என்றனர்.

மன அழுத்தத்தில் வீரர்,வீராங்கனைகள்

விளையாட்டு வீரர், வீரங்கனைகள் ஒவ்வொரு நாளும் காலை, மாலை என 2 மணி நேரம் பயிற்சி பெறுகின்றனர்.தற்போது மைதானங்கள்,ஜிம்,கிளப்புகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளதால் பயிற்சி பெற முடியாமல் வீட்டில் முடங்கியுள்ளனர். இதனால்,பெரும்பாலான வீரர், வீராங்கனைகள் மன அழுத்தத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பரிதவித்து நிற்கும் பயிற்சியாளர்கள்

தனியார் பள்ளிகளில் 15க்கும் அதிகமான விளையாட்டு மற்றும் தற்காப்பு கலை பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கான பயிற்சி பெற்ற பயிற்சியாளர்கள் பள்ளிகளில் பகுதிநேர பணிக்கு சென்று வந்தனர்.இவர்களுக்கு பள்ளிகள் மூடப்பட்டதால்,வருவாய் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

Related Stories: