×

கொரோனா நெருக்கடியை காரணம் காட்டி குடியுரிமை, மதச்சார்பின்மை பாடப்பகுதிகளை நீக்குகிறது சிபிஎஸ்சி

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தொற்று பரவலை கட்டுப்படுத்த மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையானது பள்ளி, கல்லூரிகளுக்கும்  பொருந்தும். மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் சுமையை குறைக்க சிபிஎஸ்சி (CBSE) அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் ஜனநாயக உரிமைகள், இந்தியாவில் உணவு பாதுகாப்பு, கூட்டாட்சி, குடியுரிமை மற்றும் மதச்சார்பின்மை போன்ற முக்கிய அத்தியாயங்களை நீக்கியுள்ளது.

கொரோனா வைரஸ் அசாதாரண நிலைமை காரணமாக 2020-21க்கான பாடத்திட்டங்கள் மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நேற்று அறிவித்திருந்தது. இதையடுத்து 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் பாடத்திட்டங்களை சிபிஎஸ்சி மாற்றியமைத்துள்ளது. இதில் 11 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்திட்டத்திலிருந்து கூட்டாட்சி, குடியுரிமை, தேசியவாதம் மற்றும் மதச்சார்பின்மை ஆகிய அத்தியாயங்கள் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்திட்டத்திலிருந்து, தற்கால உலகில் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள், இந்தியாவில் சமூக மற்றும் புதிய சமூக இயக்கங்கள் மற்றும் பிராந்திய அபிலாஷைகள் ஆகியவற்றை சிபிஎஸ்சி முற்றிலுமாக நீக்கியுள்ளது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்த அத்தியாயத்திலிருந்து பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம், இலங்கை மற்றும் மியான்மர் போன்ற அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவுகள் என்கிற பகுதியும் கைவிடப்பட்டுள்ளது.

9 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்திட்டத்திலிருந்து இந்திய அரசியலமைப்பின் ஜனநாயக உரிமைகள் மற்றும் கட்டமைப்பு பற்றிய அத்தியாயங்கள் நீக்கப்பட்டுள்ளன. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை, சாதி, மதம் மற்றும் பாலினம் மற்றும் ஜனநாயகத்திற்கு சவால்கள் பற்றிய அத்தியாயங்கள் நீக்கப்பட்டுள்ளன.



Tags : CBSC ,Corona ,corona crisis , Corona, CBSC
× RELATED விவேகானந்தா சிபிஎஸ்சி பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா