×

முருகன், நளினி உறவினர்களுடன் பேச அனுமதிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம்: ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்!!!

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி, முருகனை வெளிநாடுகளில் இருக்கும்  உறவினர்களுடன் பேச அனுமதிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியிருப்பதாகவும், வெளியுறவு அமைச்சகத்தின் பதிலை எதிர்பார்த்திருப்பதாகவும், தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன், நளினி லண்டனில் உள்ள முருகனின் சகோதரியுடனும், இலங்கையில் உள்ள முருகனின் தாயுடனும் வாட்ஸ் ஆப் காலில் பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரி நளினியின் தாய் பத்மா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நளினியின் தாயார் பத்மாவின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வீடியோ காலில் பேச அனைத்து கைதிகளுக்கும் அனுமதி வழங்கும் போது, நளினி, முருகனுக்கும் அனுமதி மறுக்கப்படுவது சட்ட விரோதமானது என தெரிவித்தார். மேலும் கொரோனா காலத்தில் கைதிகளுடன் உறவினர்கள் பேச அனுமதிக்க வேண்டும் எனவும், உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் படி, வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் பேசக்கூடாதா எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதை தொடர்ந்து, அரசின் தரப்பில் ஆஜராகியிருந்த அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், நளினி மற்றும் முருகனை வெளிநாடுகளில் இருக்கும் உறவினர்களுடன் பேச அனுமதிப்பது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதத்தை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வருகின்ற 14ம் தேதி வழக்கினை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

Tags : government ,Murugan ,relatives ,Nalini ,Tamil Nadu , Letter to central government on allowing Murugan and Nalini to speak to relatives in Tamil Nadu
× RELATED நெல்லையில் அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் சோதனை நிறைவு