×

ஊரடங்கால் மாதக்கணக்கில் பள்ளிகள் மூடல்: கிராமங்களில் விவசாயம் கற்கும் மாணவ, மாணவிகள்

நெல்லை: கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மாதக்கணக்கில் மூடிக் கிடப்பதால் கிராமங்களில் மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர் உதவியோடு விவசாயம் கற்று வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி தொடங்கிய ஊரடங்கு, ெதாடர்ந்து 3 மாதங்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும் என்பது யாருக்கும் தெரியாத நிலையில், மாணவ, மாணவிகள் திண்டாட்டத்தில் உள்ளனர். தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் ஆன்லைனில் வகுப்புகளை நடத்தி  வருகின்றன. ஆனால் அரசு பள்ளிகள் மற்றும் கிராமப்புற பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்   பாடங்களை படிக்க முடியாமல் தவிக்கின்றனர்.

சுமார் 100 நாட்களை கடந்து பள்ளிகள் திறக்கப்படாததால், கிராமங்களில் மாணவ, மாணவிகள் பலர் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். போக்குவரத்து தடை மற்றும் வெளிமாவட்டங்களுக்கு செல்ல வழியில்லாததால் உறவினர்களின் வீடுகளுக்கும் செல்ல முடிவதில்லை. எனவே கிராமங்களில் உள்ள மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோரோடு சேர்ந்து விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை மாவட்டம் மானூர் சுற்றுவட்டாரங்களில் மாணவ, மாணவிகள் தங்கள் தாய், தந்தையரோடு சேர்ந்து அவுரி இலை பறித்தல், காய்கறிகள் பயிரிடுதல் மற்றும் பூக்கள் பறித்தல் உள்ளிட்ட விவசாய பணிகளை கற்று வருகின்றனர்.

ஊரடங்கால் பல்வேறு தொழில்கள் முடக்கப்பட்டுள்ள சூழலில், விவசாயம் மட்டுமே தங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது. எனவே பள்ளி மாணவ, மாணவிகளும் அதை கற்று கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். மானூர் வட்டாரங்களில் மல்லி, சம்பங்கி உள்ளிட்ட பூக்கள் விற்பனை எப்போதும் அதிகம் காணப்படும். பூக்களுக்கான களை பறித்தல், செடிகளில் இருந்து பூ பறித்தல் மற்றும் அவற்றை கட்டி விற்பனை செய்தல் ஆகியவற்றை தாய், தந்தைக்கு உதவுவதோடு விவசாய பணிகள் குறித்தும் கற்க தொடங்கியுள்ளனர். பெற்றோரும் ஊரடங்கு காலத்தில் கூலியாட்கள் இன்றி, தங்கள் குடும்ப உறுப்பினர்களை பயன்படுத்தி வேளாண் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Schools , Curfew, closure of schools, agriculture in villages, students, students
× RELATED நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக...