×

கீழடி அகழாய்வில் மேலும் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுப்பு

திருப்புவனம்: கீழடி அகழாய்வின் மற்றொரு பகுதியான கொந்தகையில் மேலும் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு நேற்று கண்டெடுக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு கொந்தகை, மணலூர், அகரம், கீழடி உள்ளிட்ட 4 இடங்களில் நடந்து வருகிறது. கொந்தகையில் சுரேஷ் என்பவரது நிலத்தில் 4 குழிகள் தோண்டப்பட்டு 10 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. இதில் 3 தாழிகளில் உள்ள எலும்புகள் வெளியே எடுக்கப்பட்டு மரபணு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. கடந்த மாதம் 19ம் தேதி ஒரு குழந்தையின் முழு அளவிலான எலும்புக்கூடு கண்டறியப்பட்ட நிலையில், நேற்று தமிழக தொல்லியல் துறை இயக்குநர் சிவானந்தன் தலைமையில் நடந்த அகழாய்வில், மேலும் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு முழு அளவில் கிடைத்துள்ளது. முதுமக்கள் தாழிகள் முதல் நிலை, 2ம் நிலை, 3ம் நிலை என மூன்று வகை உள்ளன.

முதல் நிலை என்பது பராமரிக்க முடியாத முதியோர்களை உணவு, தண்ணீர் வைத்து அப்படியே புதைப்பது; 2ம் நிலை வேறு இடத்தில் அடக்கம் செய்தவர்களின் எலும்புகளை தோண்டி எடுத்து தாழியினுள் வைத்து புதைப்பது; கொந்தகையில் கிடைத்து வருவது 2ம் நிலை வகையை சேர்ந்தது என கூறப்படுகிறது. நேற்று கண்டறியப்பட்ட குழந்தையின் எலும்புக்கூடு, இறந்தவரை நேரடியாக புதைக்கப்பட்ட 3ம் நிலை என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்த எலும்புக்கூட்டின் மரபணுவை, பல்வேறு ஆய்வுகளுக்காக மதுரை காமராஜர் பல்கலை கழகத்தின் உயிரியல் துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர். ஆய்வு நடத்தினால் குழந்தை ஆணா, பெண்ணா, வயது, காலம் போன்ற விவரங்கள் துல்லியமாக அறிய முடியும்.

Tags : Underground excavation, skeleton of a child
× RELATED யானை தாக்கி விவசாயி பலி