×

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி: இதுவரை அதிமுகவின் 2 அமைச்சர்கள்; 8 சட்டமன்ற உறுப்பினர்கள் பாதிப்பு...!!

சென்னை: தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 5 கட்டங்களாக கடந்த ஜூன் 30ம் தேதி வரை  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டன. இருப்பினும், கடந்த காலங்களில் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர்   எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையை தவிர்த்து தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் உள்ள தனியார்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சில தினங்களாக அமைச்சர் தங்கமணியுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்தும் சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய மின்சாரத்துறை அமைச்சர்  ஆர்.கே. சிங் உடனான ஆலோசனையில் பங்கேற்க இருந்த நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். அதிமுகவின் பரமக்குடி தொகுதி எம்.எல்.ஏ .சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டதால், அவரது மனைவி, மகன் ஆகியோர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ குமரகுரு கொரோனாவால் பாதிக்கப்பட்டு  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினர் அம்மன் அர்ஜூணனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரும், கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதிமுகவின் கலை இலக்கிய அணி  செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, பா.வளர்மதி சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவின் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று வீடு திரும்பினார்.

ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் உள்ளிட்ட 8 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஒரு அமைச்சர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Thangamani ,Coronavirus ,Tamil Nadu ,Power Minister ,AIIMS ,AIADMK , Corona affirms Power Minister Thangamani: 2 ministers of AIADMK so far; 8 Legislators Damage ... !!
× RELATED வாக்களிக்க சொந்த ஊருக்கு சென்ற...