ஆய்வாளர்கள் கருத்து உண்மைதான்; காற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதை நம்புகிறோம்...உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்..!!

ஜெனீவா: கொரோனா வைரஸ் காற்றின் வழியாக பரவும் என்பதை ஆதாரங்கள் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது. உலகளவில் கொரோனாவால் வைரஸ் தொற்று அதி தீவிரமாக பரவிவருகிறது. உலகம் முழுவதும்  கொரோனாவால் 11,948,244 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5,46,547 பேர் உயிரிழந்தனர். இதுவரை, 6,849,076 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 58,193 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் அனைத்து நாடுகளும் திணறிவருகின்றன.

இதற்கிடையே, கொரோனா வைரஸ் காற்றில் பரவும் என்பதை ஆதாரப்பூர்வமாக கண்டறிந்து 32 நாடுகளைச் சேர்ந்த 239 ஆய்வாளர்கள் உலக சுகாதார அமைப்பிற்கு கடிதம் எழுதியிருந்தது. அதில், கொரோனா பாதித்த நபர் தும்மும் போதும்  இருமும் போதும் கண்ணுக்கு தெரியாத அவரது எச்சில் நுண்துகள்கள் மூலமாக, வைரஸ் பரவி மற்றவர்களுக்கு பாதிப்பை விளைவிக்கக் கூடும் என்றும், காற்றோட்டம் குறைவான இடங்களில் எளிதில் பரவும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.  கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவக்கூடிய நோய் என அறிவிக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் வலியுறுத்தினர். மேலும், காற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவுக்கூடிய ஆதாரம் உள்ளதால், உலக சுகாதார அமைப்பு  பரிந்துரைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஜெனீவாவில் நடத்த சுகாதாரக் கூட்டத்தில் பேசிய உலக சுகாதார அமைப்பின் முன்னணி மருத்துவர் பெனிடெட்டா அலிகிரான்ஸி, கொரோனா வைரஸ் பரவும் முறை குறித்து ஆய்வாளர்களின் கருத்துகள் உண்மைதான் என்றும்  காற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதை நம்புவதாக தெரிவித்தார். உலக சுகாதார அமைப்பின் முன்னணி மருத்துவரின் இந்த கருத்து தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: