கொத்துபரோட்டா போல வாழ்வாதாரம் சிதைந்து விட்டது: சீனாவில் வேலையிழந்த தமிழக பரோட்டா மாஸ்டர்கள்..!!

பீஜிங்:  சீனாவில் பரோட்டா மாஸ்டர்களாக பணியாற்றி வந்த இராமநாதபுரத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் கொரோனவால் வேலை இன்றி தவித்து வருகின்றனர். திருவாடா சுற்றுவட்டாரத்தில் புலியூர், ஆலம்பாடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் சீனாவில் பிரபல உணவகங்களில் பரோட்டா மாஸ்டர்களாக பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸானது சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகள் பலவற்றையும் பாதித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து, கொரோனா பரவலை தடுக்க பல நாடுகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதனால், பிரபலமான திரையரங்குகள், விளையாட்டு அரங்கம், சுற்றுலா தளங்கள், கடற்கரைகள், திருத்தலங்கள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட பல இடங்கள் மூடப்பட்டன. இதனால் நாடு முழுவதும் பொருளாதாரரீதியாக பல பிரச்சனைகள் நிலவி வருகின்றன. இந்நிலையில், கொரோனா பரவலால் சீனாவில் பல உணவகங்கள் மூடப்பட்டதால் அங்கு வேலைபார்த்து வரும் தமிழக தொழிலாளர்கள் வேலையிழந்து விட்டனர். இதனால், தாயகம் திரும்ப முடியாமலும், வருமானம் ஈட்ட முடியாமலும் தினந்தோறும் தவித்து வருகின்றனர்.

 மேலும், அவர்கள் கொத்துபரோட்டா போல தங்களது வாழ்வாதாரமும் சிதைந்து விட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர். மாத வருமானமாக 70 ஆயிரம் ரூபாய் முதல் லட்சம் ரூபாய் வரை சம்பாதித்த பரோட்டா மாஸ்டர்கள் தற்போது குடும்ப செலவிற்கே திண்டாடி வருவதாக கூறுகின்றனர். மேலும், கொரோனா தாக்கமும், எல்லை பிரச்சனையும் எப்போது?  தீர போகிறது என பரோட்டா மாஸ்டர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Related Stories: