கொரோனா விவகாரத்தில் சீனாவுக்கு சாதகமாக செயல்படுவதாக எழுந்த சர்ச்சை : உலக சுகாதார அமைப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகியது அமெரிக்கா!!

வாஷிங்டன் : உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு சாதகமாக செயல்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். இதனையடுத்து உலக சுகாதார அமைப்புடனான உணர்வை துண்டித்து கொள்வதாக கடந்த மே மாதம் அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். அந்த அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ள நிதி உதவியையும் அமெரிக்கா நிறுத்திவிட்டது.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறுவது குறித்து வெள்ளை மாளிகை ஐக்கிய நாடுகள் சபைக்கு கடிதம் எழுதியுள்ளது. ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியா கட்டரஸுக்கு கடந்த 6ம் தேதி எழுதியுள்ள கடிதத்தில், அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 6ம் தேதி முதல் இந்த வெளியேறும் நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைகளுக்காக கமிட்டியில் இடம்பெற்றுள்ள மூத்த செனட்டர் Robert Menendez தமது ட்விட்டர் பக்கத்தில் இதனை உறுதிப்படுத்தி பதிவிட்டுள்ளார்.ஐ.நாவின் ஓர் அங்கமான உலக சுகாதார அமைப்பில் 194 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள நிலையில், இதுவரை அமெரிக்கா பெரும் நிதியுதவிகளை வழங்கி வந்தது.

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறிவிட்டதாக அமெரிக்கா அறிவித்தாலும் ஐ.நா.வின் நடைமுறைப்படி 2021 ஆம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி ( 1 ஆண்டுகள்) தான் வெளியேற்ற நடைமுறை அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும். ஆனால், அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் அறிவிக்கையில் “ வரும் நவம்பர் மாதம் நடக்கும் அதிபர் தேர்தலில் தான் வெற்றி பெற்றால், உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேற அமெரிக்கா அளித்துள்ள நோட்டீஸை திரும்பப் பெறுவோம்” எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Related Stories: