×

காட்சிப் பொருளாக மாறிய உலகப் புகழ்பெற்ற காஞ்சி பட்டு: வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நெசவாளர்கள்

காஞ்சிபுரம்: கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பட்டு வர்த்தகம் முழுமையாக முடங்கியுள்ளது. இதனால் நெசவாளர்கள் வாழ்வாதாரம் இன்றி தவிக்கிறார்கள். கொரோனா பாதிப்பால், நாடு முழுவதும் ஸ்தம்பித்து உள்ள நிலையில் தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 21 பேர் இறந்துள்ளனர். 1300க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து சிகிச்சை பெறுகின்றனர். பொதுப் போக்குவரத்துக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், மற்ற மாவட்டங்களுக்கு செல்வதற்கும் இ-பாஸ் கட்டுப்பாடுகள் உள்ளதால், பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் திருமணம் உள்பட பல்வேறு சுப நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

அரசின் கட்டுப்பாட்டால் பட்டு சேலை கடைகள் குறிப்பிட்ட நேரத்தில் திறக்கப்பட்டாலும், பொதுமக்கள் அதிகம் வராததால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 25க்கும் மேற்பட்ட பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உள்ளனர். மேலும் தனியார் பட்டு நெசவாளர்கள் சுமார் 20 ஆயிரம் பேர் உள்ளனர். இந்த பொது முடக்கத்தால் நெசவாளர்கள் வேலையின்றி வீட்டிலேயே முடங்கி பெரிதும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். பட்டுத்தறியில் சேலை நெய்து முடித்த நெசவாளர்கள், சேலைகளை விற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். புதிதாக சேலை நெய்ய மூலப்பொருட்களான பட்டு, ஜரிகை, கோறா கிடைக்காமலும் நெசவாளர்கள் சிரமப்படுகின்றனர்.

இதனால் அடுத்து வரும் நாட்களை எப்படி சமாளிப்பது என தெரியாமல் நெசவாளர்கள் விழிபிதுங்கியுள்ளனர். சித்திரை, வைகாசி மாதங்களில் அதிகளவில் திருமணங்கள் நடைபெறும். இதனால் பங்குனி மாதத்தில் பட்டு சேலை விற்பனை மும்முரமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தாக்கத்தால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, திருமணங்களுக்கான பட்டு சேலை விற்பனை நடைபெறவில்லை. இதையொட்டி, நெசவாளர்கள் வாழ்வாதாரம் இன்றி தவிக்கின்றனர். எனவே, கொரோனா பொதுமுடக்கத்தால் தொடர்ந்து 100 நாட்களுக்கு மேலாக வேலையின்றி நைந்து போயுள்ள நெசவாளர்கள் நலன்கருதி தமிழக அரசு உரிய உதவி தொகை வழங்க வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : weavers , As a visual material, world-renowned, porcelain, life-sustaining weavers
× RELATED ₹72 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை பணி