×

திருவாத்தூர் ஊராட்சியில் சாலையை ஆக்கிரமிக்கும் கடைக்காரர்கள்: மேல் வாடகை விடுவதாக புகார்

செய்யூர்: திருவாத்தூர் ஊராட்சியில், பவுஞ்சூர் பஜார் கடைகளை வாடகை எடுத்தவர்கள், கடையின் முன் பகுதிகளையும் ஆக்கிரமித்து கடைகளை கட்டியுள்ளனர். இதுபோல் ஆக்கிரமித்து கட்டிய இடத்தை, மேல் வாடகைக்கு விட்டுள்ளதாக குற்றச்சாட்டு ஏழுந்துள்ளது. லத்தூர் ஒன்றியம் திருவாத்தூர் ஊராட்சி, பவுஞ்சூர் பஜார், சுற்றியுள்ள 50 கிராமங்களின் மத்தியில் அமைந்துள்ளது. இங்கு லத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்கள், தனியார் தொழில் நிறுவனங்கள், பள்ளிகள் ஆகியவை உள்ளன. பஜார் பகுதியில் 200க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் மற்றும் சிறு, குறு கடைகள் உள்ளன.கடந்த பல ஆண்டுகளுக்கு முன், ஒன்றிய நிர்வாகம் மூலம் கட்டப்பட்ட இந்த கடைகள் ஏலம் விடப்பட்டது. இதனை ஏலம் எடுத்தவர்கள், மாதந்தோறும் ஒரு தொகையை வாடகையாக செலுத்தினர். பின்னர், சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக, பஜார் கடைகளுக்கான ஏலம் விடவில்லை.

இதனை பயன்படுத்தி கொண்ட கடைக்காரர்கள், விதிகளை மீறி அவர்களின் கடைகளுக்கு முன் பகுதிகளை ஆக்கிரமித்து, கூடுதல் கடைகளை கட்டியுள்ளனர். மேலும், அந்த ஆக்கிரமிப்பு கடைகளை, சிலருக்கு மேல் வாடகைக்கு விட்டு லாபம் சம்பாதித்து வருகின்றனர். ஆனால், ஊராட்சி ஒன்றியத்துக்கு முறையான வரியும் வாடகையும் செலுத்துவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கூடுதலாக கடைகள் உருவானதால், பஜார் பகுதி வழியாக செல்லும் நெடுஞ்சாலை நாளுக்கு நாள் குருகியதோடு, அவ்வழியாக சொல்லும் மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி, கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதுதொடர்பாக, அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், ஒன்றிய அதிகாரிகளோ, நெடுஞ்சாலை துறையினரோ,  ஊராட்சி நிர்வாகமோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் கூறப்படுகிறது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி பஜார் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள ஆக்கிரமிப்புகளை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Shoppers ,Road ,Thiruvathur ,Thiruvattur , Thiruvattur panchayat, road, occupation, shopkeepers, top rental, complaint
× RELATED தனியார் அடுக்குமாடி குடியிருப்பில்...