தொடுகாடு ஊராட்சியில் திறந்தவெளி பாராக மாறிய ரேஷன் கடை: குடிமகன்கள் அட்டகாசம்; பொதுமக்கள் முகம் சுளிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த தொடுகாடு ஊராட்சியில் ரேஷன் கடையை குடிமகன்கள் பாராக பயன்படுத்துவதால் பொதுமக்கள் முகம் சுளிக்கும் நிலை உள்ளது. கடம்பத்தூர் ஒன்றியம் தொடுகாடு ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே தொகுதி எம்.எல்.ஏ. நிதியில் புதிய ரேஷன் கடை கட்டி பயன்பாட்டில் உள்ளது. இதன்மூலம் அக்கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்களான அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் ஆகியவற்றை பெற்று பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், ரேஷன் கடை அருகில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. இதை வாங்கும் குடிமகன்கள், இரவு நேரத்தில் ரேஷன் கடை வளாக பகுதியை முழுமையாக ஆக்கிரமித்து, திறந்தவெளி பாராக பயன்படுத்தி வருகின்றனர். வளாகப்பகுதியில் இவர்கள் விட்டு செல்லும் மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் கப், உணவு பொட்டல குப்பைகள் அங்கேயே விட்டு செல்கின்றனர். இதனால் அங்கு குப்பை குவியலாக காணப்படுகிறது. நாள்தோறும் ரேஷன் கடை திறப்பின் போது ஊழியர்கள் இதை அப்புறப்படுத்தி விட்டு பொருட்கள் சப்ளை செய்யும் நிலை உள்ளது. இதை ஊராட்சி நிர்வாகமும் கண்டும் காணாமல் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, ரேஷன் கடைக்கு சுற்றுச்சுவர் அமைக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: