அரசு நிலத்தில் குடிசை அமைப்பதில் இரு தரப்பினர் திடீர் மோதல்

* 5 பேர் படுகாயம்

* வாகனங்கள் உடைப்பு

* போலீஸ் குவிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கரிக்கலவாக்கம் கிராமத்தில் அரசு நிலத்தில் குடிசை அமைப்பதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அங்கு பதட்டத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ளது கரிக்கலவாக்கம் கிராமம். இக்கிராமத்தில் சுடுகாட்டுக்குப் பக்கத்தில் இருந்த பொது இடத்தில் 20க்கும் மேற்பட்டோர் குடிசை போட்டுக் கொள்ள ஊராட்சி மன்ற தலைவர் கயல்விழி வெங்கடேசன் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இதே ஊராட்சியில் மேற்கு திசையில் சுமார் 2 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதில், சிலர் நேற்று குடிசைகளை போட்டு ஆக்கிரமிப்பு செய்தனர். இச்செயலில் ஜனார்த்தனன் என்பவரது தூண்டுதல் இருந்ததாக கூறி, ஊராட்சி மன்ற தலைவர் கயல்விழிவெங்கடேசன் தரப்பினர் குற்றம்சாட்டியதோடு, ஜனார்த்தனன் வீட்டில் புகுந்து சரமாரியாக தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில், இவரது வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ், கார், வேன், ஜீப், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது.

இந்த மோதலில் ஜனார்தனன் தரப்பில் 2 பேரும், ஊராட்சி மன்ற தலைவர் கயல்விழி வெங்கடேசன் தரப்பில் 3 பேரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் போராடினர். இதுகுறித்து, தகவலறிந்த வெங்கல் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் கிராமத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அங்கு மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: