சீன நாட்டு செயலிகளுக்கு பதிலாக உள்நாட்டு ஆப்களை உருவாக்க ஐஐடி விஞ்ஞானிகள் படுதீவிரம்: புதிய நிறுவனங்களுக்கு பொன்னான வாய்ப்பு

புதுடெல்லி: சமீபத்தில் டிக்டாக் உட்பட 59 செயலிகளுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்த நிலையில் ஐஐடிகள் உள்நாட்டு ஆப்களை தயாரிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. லடாக் கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்ததைத் தொடர்ந்து, சீனா நாட்டை சேர்ந்த டிக்டாக், ஹலோ, ஷேர் உட்பட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இவற்றில் குறிப்பாக டிக்டாக் செயலியை கோடிக்கணக்கானவர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வந்தனர். லட்சக்கணக்கானோர் வீட்டில் இருந்தபடியே தங்களது திறமைகளை டிக்டாக்கில் பதிவிட்டு லைக்ஸ்களை அள்ளி வந்தனர். இதற்கு சீனாவே ஆப்பு வைத்துக்கொண்டது. செயலிகள் தடை செய்யப்பட்டதால் மக்கள் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்று பறிபோய் விட்டதாக கருதப்பட்டாலும், உள்நாட்டு தொழில்நுட்பங்களுக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

புதுமைகளுக்கும், கண்டுபிடிப்புகளும் எல்லையில்லாதவை. நமது நாட்டில் ஏராளமான திறமைகள் கிடக்கின்றது. தேவை அடிப்படையிலான தொழில்நுட்பங்களுக்கும் இந்தியாவில் பஞ்சமில்லை. உள்நாட்டில் ஆப்களை தயாரிப்பதில் 20% மட்டுமே சவால்களை எதிர்கொள்ளவேண்டி உள்ளது. தேவையான அனைத்து தொழில்நுட்பங்களும் நம் நாட்டில் இருக்கிறது. ஆனால், அவற்றின் தயாரிப்புக்களை சந்தைப்படுத்துவதற்கு மற்றும் பெரிய அளவிலான பிராண்டுகளை உருவாக்குவதற்கும் ஆதாரங்கள் இல்லை. புதிய தயாரிப்புக்களுக்கான கொள்கைகள், வணிக மாதிரிகள், அரசிடம் இருந்து மூலதனத்தை அணுகுவது ஆகியவற்றில் தெளிவான திட்டங்களுடன் நிறுவனங்கள் புதிய கண்டுபிடிப்புகளுக்கு முன்வர வேண்டும்.

ஏற்கனவே, டெல்லி ஐஐடி முன்னாள் மாணவர்கள் டிக்டாக் செயலியை போன்றதொரு ஆப்பை உருவாக்கி இருந்தனர். கோடைக்கால திட்டமான இந்த புதிய ஆப்பிற்கு அவர்கள் ‘ரோபோசா’ என பெயர் வைத்திருந்தனர். உள்நாட்டில் சேமிக்கப்பட்ட தரவுகளில் உள்நாட்டு ஆப்களில் பயன்பாடுகளில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்காது எனவும் கூறப்பட்டுள்ளது. திறமையை பொறுத்தவரை சீன தொழில்நுட்பங்களுக்கு இந்தியர்கள் குறைந்தவர்கள் இல்லை. தற்போது ஆத்மனிர்பர் உள்நாட்டு தயாரிப்புக்களை ஊக்குவிப்போம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றது.

எனவே, தற்போதைய சூழலில் பொருட்களை சந்தைப்படுத்துதல் மற்றும் திறமை இரண்டுமே உள்ளன. எனவே, இந்த சிறந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதற்கு ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஐஐடி விஞ்ஞானிகளும் புதிய ஆப்களை உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். எல்லாம் நன்மைக்கே என்பது போல சீன ஆப்களுக்கு தடை விதித்ததன் காரணமாக உள்நாட்டு ஆப் உருவாக்குவதற்கான அவசியம் மற்றும் தேவை உருவாகி உள்ளது. இதன் மூலம் பாதுகாப்பு அச்சுறுத்தல் இன்றி மக்கள் இவற்றை பயன்படுத்தலாம்.

* அதிக விளம்பரம் தேவை

சீன ஆப்கள் அறிமுகம் செய்யப்பட்ட போது, அவற்றுக்கு விளம்பரம் அதிகளவில் செய்யப்பட்டன. இதனால், மக்கள் மனதில் அவை எளிதாக இடம் பிடித்து விட்டன. சீன செல்போன் நிறுவனங்களும் இந்த விளம்பரத்தில் முக்கிய பங்கு வகித்தன. அதேபோல், இந்திய ஆப்களையும் பிரபலப்படுத்த, அதிகளவில் விளம்பரம் செய்ய வேண்டியது அவசியம் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

* அமெரிக்காவிலும் தடை

இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவும் டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோ நேற்று அளித்த பேட்டியில், “ டிக்டாக் உள்ளிட்ட சீன நிறுவனத்தின் செயலிகளில் பயனர்களின் தரவுகள் பாதுகாப்பாக இல்லை. இதுபோன்ற நிறுவனங்கள் சீன அரசுக்கு உளவு வேலை பார்ப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எனவே, சீன செயலிகளுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்,’’ என்றார்.

* லட்சக்கணக்கில் இருந்தாங்க...இப்போ, நூறை கூட தாண்டல

இந்தியாவில் டிகடாக் ஆப்பை 20 கோடி பேர் பயன்படுத்தி வந்தனர். இந்த ஆப்பின் மூலம் தங்கள் திறமையை காட்டி உலகளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை, அதாவது பின்தொடர்பவர்களை பலர் வைத்திருந்தனர். டிக்டாக்கிற்கு விதிக்கப்பட்ட தடையால், இவர்களின் பிரபலம் ஒரேநாளில் பூஜ்யமாகி விட்டது. இப்போது, இவர்கள் எல்லாம் இந்தியாவின் ரோபோசா, சிங்காரி, ஷேர்சாட் போன்ற ஆப்களுக்கு மாறி விட்டனர். இருந்தாலும், டிக்டாக்கில் இருந்த ரசிகர்கள் பட்டாளம் இதில் கிடைக்கவில்லை. லட்சக்கணக்கில் ரசிகர்களை வைத்திருந்த இவர்களுக்கு இப்போது, நூறு ரசிகர்கள் கூட கிடைக்கவில்லை. இதனால், டிக்டாக் பிரபலங்களும் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.

ஹாங்காங்கில் இருந்தும் ஓட்டம்

இந்தியாவில் டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து ப்ளே ஸ்டோரில் இருந்து அவை நீக்கப்பட்டன. இதனிடையே, ஹாங்காங்கில் இருந்தும் வெளியேறுவதாக டிக்டாக் அறிவித்துள்ளது.

* தன்ராஜ் ‘பிரகாஷ்’ சவான் என்பவருக்கு டிக்டாக்கில் 8.5 லட்சம் ரசிகர்கள் இருந்தனர். இப்போது இவர், ரோபோசாவில் இருக்கிறார். ஆனால், இதில் 9 பேர் மட்டுமே இவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர்.

* அதேபோல், விரல் மூலம் ஓவியம் வரையும் மகஷே் கப்சே என்பவருக்கு 12 லட்சம் ரசி்கர்கள் இருந்தனர். இவருக்கு 2 பேர் மட்டுமே இப்போது இருக்கின்றனர்.

* சனாத்தன் மதோ, சவித்திரி தேவி என்ற சகோதரன், சகோதரிக்கு 27 லட்சம் ரசிகர்கள் இருந்தனர். இப்போது இவர்களுக்கு 67 பேர் மட்டுமே இருக்கின்றனர்.

Related Stories: