தெலங்கானாவில் 132 ஆண்டுகால பழமையான தலைமைச்செயலகம் இடிப்பு: ரூ.500 கோடியில் புதிய கட்டிடம் கட்ட உயர் நீதிமன்றம் அனுமதி

திருமலை: தெலங்கானா அரசின் தலைமை செயலகம் 132 ஆண்டுகளாக சைபாபாத் நிஜாம் நவாப்களின் அரண்மனையாக இருந்து வந்தது. பின்னர் ஒருங்கிணைந்த ஆந்திராவில் 16 முதல்வர்கள் ஆட்சி செய்தனர். தனி தெலங்கானாவாக உருவான பிறகு 2வது முறையாக சந்திரசேகரராவ் முதல்வராக ஆட்சி செய்து வருகிறார். 25 ஏக்கர் நிலப்பரப்பில், 10 லட்சம் சதுர அடியில் 132 ஆண்டுகளாக பல கட்டிடங்களில் 10 பிளாக்குகளாக தலைமை செயலகம் செயல்பட்டது. இதில்,  மிகவும் பழமையான ஜி-பிளாக் 1888ம் ஆண்டில் 6வது நிஜாம் நவாப் ஆட்சியின்போது கட்டப்பட்டது. பின்னர்,  2003ல் டி-பிளாக், 2012ல் எல்-பிளாக், வடக்கு மற்றும் தெற்கு பிளாக் கட்டிடம் கட்டப்பட்டு தலைமை செயலகம் செயல்பட்டு வருகிறது.

ஆனால், இந்த கட்டிடங்கள் பழமையானதாகவும் உரிய பாதுகாப்பு இல்லை என கூறி முதல்வர் சந்திரசேகர ராவ் ரூ.500 கோடியில் புதிய தலைமை செயலகம், சட்டப்பேரவை கட்ட முடிவு செய்தார். இதையடுத்து கடந்தாண்டு ஜூன் 21ம் தேதி அடிக்கல் நாட்டி பூமி பூஜை செய்தார். ஆனால், இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்கள் பணத்தை வீணாக்குவதாக கூறி, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் உயர்நீதிமன்றம் புதிய தலைமை செயலகம் கட்ட பழைய தலைமை செயலகத்தை இடிப்பதற்கு  எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து, புதிய கட்டிடம் கட்ட அனுமதி வழங்கி உத்தர விட்டது.

இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு முதல் தலைமை செயலக கட்டிடங்கள் இடிக்கும் பணிகள் தொடங்கியது. 2 கி.மீட்டர் தொலைவில் அப்பகுதி முழுவதும் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. 132 ஆண்டுகால சரித்திரம் வாய்ந்த ஜி-பிளாக் கட்டிடம் முதற்கட்டமாக இடிக்கப்பட்டது. இதையடுத்து, அனைத்து பிளாக்குகளும் இடிக்கப்பட்டது. கட்டிட இடிபாடுகள் அனைத்தும் அகற்றப்பட்டு அடுத்த மாதம் முதல் வாரத்தில் முதற்கட்டமாக நவீன வசதிகளுடன் தலைமை செயலகம் கட்ட முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் பூமி பூஜை நடக்கிறது.

Related Stories: