பல்கலைக்கழகம், கல்லூரி தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை:

நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் பருவத் தேர்வுகள் ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படுவது வழக்கம். கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக குறிப்பிட்ட காலத்தில் தேர்வுகளை நடத்த முடியவில்லை. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இறுதி பருவத் தேர்வுகளை எழுத எந்த மாணவரும் தயாராக இல்லை. ஆனால், உயர்கல்வித்துறை இறுதி பருவத் தேர்வுகள் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் என்று கூறி, அதற்கான அனுமதியை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் பெற்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கொரோனா அச்சம் காரணமாக மராட்டியம், மத்தியபிரதேசம், பஞ்சாப், மேற்குவங்கம், ராஜஸ்தான், ஒடிசா மற்றும் அரியானா ஆகிய 7 மாநிலங்கள் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் இறுதிப் பருவத் தேர்வுகளை ரத்து செய்துள்ளன.

தமிழ்நாட்டிலும் இதுபற்றி முடிவெடுக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கல்லூரி இறுதித் தேர்வுகளை மட்டும் நடத்தியே தீரப்போவதாக புதிய நிலைப்பாடு எடுப்பது எந்த வகையில் நியாயம்? எத்தனை கோணத்தில் ஆய்வு செய்தாலும், தேர்வை விட மாணவர்களின் உயிர்தான் முக்கியமாகும். எனவே, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் இறுதிப் பருவத் தேர்வுகளை மத்திய மனிதவள அமைச்சகம் ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இறுதிப் பருவத் தேர்வுகளை ரத்து செய்து, அகமதிப்பீட்டு தேர்வுகளின் அடிப்படையில் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

Related Stories: