×

திருவள்ளூரில் ஐஓசிஎல் நிறுவனம் தீவிரம் விவசாயிகள் எதிர்ப்பையும் மீறி எரிவாயு குழாய் பதிக்கும் பணி: கிருஷ்ணகிரியில் கருப்புகொடி போராட்டம்

சென்னை: எண்ணூர் முதல் திருவள்ளூர் வழியாக தூத்துக்குடி வரை குறிப்பிட்ட வழித் தடங்களில் அமைந்திருக்கும் விவசாய நிலங்கள், நீரோடைகள், ஏரிகள், மானாவாரி விவசாய நிலங்கள் வழியாக, எரிவாயு கொண்டு செல்ல குழாய் பதிக்கும் பணிக்கு, விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும், இப்பணியில் ஐஓசிஎல் எண்ணெய் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கருப்பு கொடி போராட்டம் நடத்தினர். சென்னை எண்ணூர், திருவள்ளூர்,  பெங்களூரு, புதுச்சேரி, நாகப்பட்டினம், மதுரை, தூத்துக்குடி வரை எரிவாயு குழாய் பதிப்பதற்காக 2017ல் மத்திய சுற்றுச் சூழல் நிறுவனம் அனுமதி அளித்திருக்கிறது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனால் இத்திட்டம் 2017ல் தொடங்கப்பட்டு குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனால், விவசாய நிலங்கள், நீரோடைகள், ஏரிகள், மானாவாரி விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். பல்வேறு இடங்களில் அருகிலேயே அரசு நிலம் இருப்பதாகவும், அந்த வழியே குழாய்கள் கொண்டு செல்லப்படாமல், விவசாய நிலங்களில் அனுமதி இன்றி குழாய் பதிப்பு பணி நடைபெறுவதை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கான இழப்பீடுகள் எதுவும் இதுவரை பல பகுதிகளில் வழங்கப்படவில்லை எனவும் விவசாயிகள் கூறி வருகின்றனர். இந்நிலையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன ஊழியர்கள், திருவள்ளூர் மாவட்டத்தில் எரிவாயு குழாய் பதிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இப்பணிகள் திருவள்ளூர் அடுத்த திருவூர் ஈஷா ஏரிக்குள் விவசாயிகள் எதிர்ப்பை மீறி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் மேட்டுப்பாளையம். நெய்தவாயல். நாலூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக, விவசாயிகள் அனுமதி இன்றி விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் எரிவாயு குழாய் பதிக்கப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் நெய்தவாயல் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் பைப்லைன் கொண்டு செல்லும் திட்டத்தை மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என கிராம சபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம், நெய்தவாயல், கல்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய நிலங்களிலும், குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியிலும் எரிவாயு குழாய் பதிப்பதால் தங்களுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். பூமிக்கடியில் பதிக்கப்படும் எரிவாயு குழாய் எப்போது வேண்டுமானாலும் வெடித்து சிதறாலாம் என்பதால் அச்சத்துடனேயே தங்களது வாழ்க்கையை கழிக்கும் சூழல் உருவாகும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன் ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் எரிவாயு குழாய் வெடித்து பலர் உயிரிழந்துள்ளதால் தங்களுக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். தற்போது ஊரடங்கு காலத்தில் அனைத்து தரப்பினரும் வீடுகளில் முடங்கி இருந்தாலும் உணவு பொருட்களை உற்பத்தி செய்து வரும் விவசாயிகளை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். ஆடம்பர பொருட்களான கார், நகை போன்றவற்றை தவிர்த்து மக்கள் அரிசி, காய்கறிகளை மட்டுமே தேடி ஓடுகின்றனர். இப்படி அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளை காப்பாற்ற மாற்று வழியில் திட்டத்தை நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், விளை நிலங்களின் உரிமையாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

ஐஓசிஎல் ஊழியர்கள் கூறுகையில், “இழப்பீடு வழங்கிய பகுதிகளில் மட்டுமே குழாய்கள் பதிக்கப்படுகின்றன. மாற்றுப்பாதையில் தொழில்நுட்ப பிரச்னைகள்  ஏற்பட வாய்ப்பு அதிகம். நிலம் வழங்காதவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் நல்ல முடிவு எட்டப்பட்டு விடும்’’ என்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில்: இந்நிலையில், பாரத் பெட்ரோலியம் நிறுவனம் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து கர்நாடகா வரை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை துவங்கி உள்ளனர். தற்போது சூளகிரி தாலுகா அயர் நப்பள்ளி, அலேசீபம், சீபம், சாமனப்பள்ளி, பாத்தகோட்டா, ஓசூர் வழியாக கர்நாடகாவிற்கு எரிவாய்வு கொண்டு செல்ல குழாய் பதிக்க ஆயத்த பணிகள் நடக்கிறது.

இதற்காக 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், 100 ஆண்டு பழமை மிக்க விவசாய நிலங்களில் குழாய் பதிக்க தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இதை தடை செய்து விளை நிலங்களை காப்பாற்ற வேண்டும் என சூளகிரி தாலுகா சாமனப்பள்ளி கிராமத்தில் உள்ள விவசாயிகள் தங்களது வீடுகளில் நேற்று கருப்பு கொடி கட்டியும், விளை நிலங்களில் கருப்புக்கொடியுடன் நின்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் மேட்டுப்பாளையம். நெய்தவாயல். நாலூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக, விவசாயிகள் அனுமதி இன்றி விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் எரிவாயு குழாய் பதிக்கப்பட உள்ளது.


Tags : company ,Thiruvallur IOCL ,Thiruvallur , Thiruvallur, IOCL Company, Farmers Resistance, Gas Pipeline, Work, Krishnagiri, Black Flag Strike
× RELATED சென்னையில் தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றிய இளம் பெண் தற்கொலை