சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? எடப்பாடி, ஓ.பி.எஸ்சிடம் பட்டியல் ஐவர் குழு சமர்ப்பித்தது

சென்னை: சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அதிரடியாக மாற்றப்பட உள்ளனர். இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ள ஐவர் குழு புதிய நிர்வாகிகள் பட்டியலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ்சிடம் சமர்பித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாக அரசியல் கட்சிகள் சார்பில் பொதுக்கூட்டங்கள், ஆலோசனைகள், கட்சி கூட்டங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்கிறது. திமுக சார்பில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், ஆலோசனை கூட்டங்கள் அனைத்துமே வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டங்களை அதன் கட்சி தலைவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலமாக கூட நடத்தாமல் உள்ளனர்.

இதனால் பல மாவட்ட நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். பல மாவட்டங்களில் கோஷ்டி பூசல் நிலவுகிறது. முதல்வர் எடப்பாடி அணி என்றும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி என்றும் தற்போது செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற கோஷ்டி பூசல்களால் கட்சியின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக நிர்வாகிகள் கட்சி தலைமைக்கு தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று முன்தினம் இரவு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் ஆகிய 5 பேர் குழுவினர் கூடி ஆலோசனை நடத்தினர். இந்த 5 பேர் அணியினர் தான், தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகளிடம் இருந்து வரும் புகார் மனுக்களை விசாரித்து, தவறு செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கட்சி தலைமைக்கு சிபாரிசு செய்து வருகிறார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஐவர் அணியினர் கூடி ஆலோசனை நடத்தியது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, அதிமுக தலைமை கழக மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தில் 2021 ஏப்ரல் மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும். தேர்தலுக்கு தயாராக 8 மாதங்கள் மட்டுமே உள்ளது. இப்போதாவது கட்சி பணிகளிலும் கொஞ்சம் ஆர்வம் காட்டினால்தான் வருகிற சட்டமன்ற தேர்தலை சந்திக்க முடியும். தற்போது அதிமுக மாவட்ட செயலாளர்களாக உள்ள பலர் அமைச்சர்களாகவும் உள்ளனர். கடந்த எம்பி தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இதற்கு மாவட்ட செயலாளர்கள் மற்றும் அந்த மாவட்டங்களில் உள்ள கோஷ்டி பூசல்கள்தான் காரணம். அதனால் சில மாவட்ட செயலாளர்களை மாற்றி, மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ளவர்களை மாவட்ட செயலாளர்களாக நியமிக்க அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது. அதனால்தான் அந்தந்த மாவட்டங்களில் இருந்து கட்சி தலைமைக்கு வந்துள்ள புகார் மனுக்களை ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது. இதில் அதிக புகார் வந்துள்ள மாவட்ட செயலாளர்கள் மீது ஆதாரத்துடன் குற்றச்சாட்டு இருந்தால் அவர்களை மாற்றி புதிய மாவட்ட செயலாளர்கள் விரைவில் நியமிக்கப்படுகிறார்கள்.

இதுவரை, ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள்தான் கட்சியிலும், ஆட்சியிலும் பதவியில் இருக்கிறார்கள். இனி அந்த நிலை மாற்றப்பட்டு, தற்போதுள்ள கட்சி தலைமைக்கும், அந்தந்த மாவட்ட அதிமுக தொண்டர்களுக்கும் உண்மையான விசுவாசத்துடன் இருப்பவர்களுக்கே எம்எல்ஏ சீட் மற்றும் கட்சி பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், புதிய மாவட்ட செயலாளர்கள் பட்டியலை கட்சியின் ஒருங்கிணைப்பாளரான முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும்,  துணை ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடமும் ஐவர் குழு சமர்ப்பித்துள்ளதாக தெரிகிறது. விரைவில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு அதிரடி மாற்றங்கள் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றார். தற்போதுள்ள கட்சி தலைமைக்கும், அந்தந்த மாவட்ட அதிமுக தொண்டர்களுக்கும் உண்மையான விசுவாசத்துடன் இருப்பவர்களுக்கே எம்எல்ஏ சீட் மற்றும் கட்சி பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: