பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவுக்கு சட்டப்பூர்வ அனுமதி உள்ளதா? அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்திக்கொள்ள சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என 4 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த வக்கீல் அதிசயகுமார், மாநில மனித உரிமை ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் சித்ரவதை செய்து கொல்லப்பட்டனர்.

இந்த சித்ரவதைக்கு பிரண்ட்ஸ் ஆப் போலீசில் சிலர் உடந்தையாக இருந்துள்ளனர். பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவைச் சேர்ந்தவர்கள், கம்புகளை வைத்துக்கொண்டு குற்றவாளிகளை தேடிச்சென்று தாக்குவது, போக்குவரத்தை சரி செய்வதாக கூறி வரம்பு மீறுவது, காவல்நிலையத்தில் குற்றவாளிகளை அடித்து சித்ரவதை செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு அறிவித்ததில் இருந்து பல இடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுபவர்களை காவல்துறையினருடன் சேர்ந்து லத்தியால் அடித்து, உதைத்து மனித உரிமை மீறலில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.

எனவே, காவல்துறையினருடன் இணைந்து பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு செயல்பட நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த ஆணையத்தின் தலைவர் (பொறுப்பு) நீதிபதி துரை ஜெயச்சந்திரன் தமிழக காவல்துறையின் அலுவல் பணிகளுக்கு, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்திக்கொள்ள சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளதா?, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை காவல்துறையின் அலுவல் ரீதியான பணிக்கு பயன்படுத்துவது மனித உரிமை மீறல் ஆகாதா?, அவ்வாறு பயன்படுத்துவது உச்ச நீதிமன்றம்  பிறப்பித்த உத்தரவுக்கு எதிரானதாக இருக்காதா, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினர் அத்துமீறுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதால் நிரந்தரமாக தடை விதிக்கலாமா என கேள்வி எழுப்பினார். பின்னர், இந்த கேள்விகளுக்கு தமிழக உள்துறை முதன்மை செயலாளர் மற்றும் டி.ஜி.பி. ஆகியோர் விரிவான அறிக்கையாக 4 வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Stories: